Tamil Cinema News | சினிமா செய்திகள்
பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது இதுதான்… பொங்கிய சத்யராஜ்
திரையில் நடிக்கும் பெண்களுக்கும், கலைஞர்களுக்கும் நான் காவலாக இருப்பேன் என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் குறித்த பிரச்சனை குறைந்தபட்சம் பொது வெளியில் தெரிந்து விடும். ஆனால், படத்தின் பின்னணியில் வேலை செய்யும் தொழில்நுட்ப பெண்களுக்கு நடக்கும் பிரச்சனை குறித்து பேச முடியாத நிலை தான் இருக்கிறது. சமீபத்தில், தெலுங்கு திரைப்பட உலகில் சர்ச்சையை கிளப்பியவர் ஸ்ரீ ரெட்டி. பலரின் ஆபாசமான உரையாடல், அந்தரங்க புகைப்படம் என கடந்த கோலிவுட் சுசி லீக்ஸை மிஞ்சியது ஸ்ரீ லீக்ஸ். இது பல மொழி திரையுலகத்தையும் சற்று அதிரத்தான் வைத்தது.
இதில், முதலில் கண் விழித்தது கோலிவுட் சினிமா தான். இத்துறையில் நடக்கும் பாலியல் குறித்த பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் கௌரவ ஆலோசகராக நடிகை ரோகிணி நியமிக்கப்பட்டு இருக்கிறார். தலைவராக வைஷாலி சுப்ரமணியனும், துணைத் தலைவராக ஏஞ்சல் சாம்ராஜும் பதவியேற்று இருக்கின்றனர்.
இதன், தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. நடிகைகள் ரோகிணி, சச்சு, இயக்குனர்கள் பா.ரஞ்சித், புஸ்கர் காயத்ரி, பாலாஜி சக்திவேல், பி.சி.ஸ்ரீராம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், “சமூகத்தில் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பது சாஸ்திரம், சடங்குகள், பண்பாடு, கலாசாரம் தான். இதற்கு சாதி வேறுபாடுகள் மற்றும் மதம் ஆகியவை உதவிக்கொண்டு இருக்கிறது. பெண்கள் இதில் இருந்து விடுபட வேண்டும். எதற்காக அடிமையாக்கப்பட்டார்கள் என்பதை முதலில் அறிய வேண்டும். சினிமாவில் இருக்கும் அனைத்தும் பெண்களும் கல்வி, பொருளாதாரத்தில் தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும். அப்போது தான், உரிமைக்காக போராட முடியும். என் துறை பெண்களின் பாதுகாப்பு அமைப்புக்காக நான் உறுதுணையாக இருப்பேன்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
கோலிவுட்டில் இவரின் பேச்சு பெரும் வரவேற்பை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
