விஜய் 61 படத்தில் நடிக்காததற்கு சூர்யா காரணமில்லை என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

தெறி படத்திற்கு பிறகு இளையதளபதி விஜய்-அட்லீ கூட்டணி இணையும் விஜய் 61 படத்தில், விஜய்க்கு மூன்று கதாநாயகிகள் என முதலில் தகவல் வெளியாகின. குறிப்பாக விஜயின் பிளாஷ்பேக் காட்சிகளில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளார் எனவும் கூறப்பட்டது. இந்த தகவல் பின்னர் படக்குழுவினரால் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் திடீரென படப்பிடிப்பு துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன்னர், விஜய் 61 படத்திலிருந்து ஜோதிகா விலகுவதாக அறிவித்தார். திடீரென ஜோதிகா விலகுவதற்கு, அவரது கணவர் சூர்யாதான் காரணம் எனவும், அவரது குடும்பத்தினர்தான் காரணம் எனவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இவற்றுக்கெல்லாம் பதிலளிக்காமல் ஜோதிகா அமைதியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ”விஜய் 61 படத்தில் நடிக்காததற்கு எனது கணவர் சூர்யாவும், எனது குடும்பத்தினரும் காரணமல்ல. வெளியிலிருந்து வரும் அழுத்தத்திற்காக, யாரும் கடைசி நேரத்தில் படத்திலிருந்து வெளியேற மாட்டார்கள். எனக்கு அந்த படத்தில் சில பிரச்சனைகள் இருந்தது. அவை பின்னர் சுமூகமாக முடித்து வைக்கப்பட்டது. அது என்ன பிரச்சனைகள் என்பது குறித்து இங்கு விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை.” என ஜோதிகா தெரிவித்துள்ளார்.