Tamil Cinema News | சினிமா செய்திகள்
என் படத்தில் இருந்து யுவன் விலகியதற்கு இதுதான் காரணம் – சுசீந்திரன்

சாம்பியன் படத்தில் இருந்து யுவன் விலகியதற்கு இதுதான் காரணம் என இயக்குனர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருப்பது வைரலாக பரவி வருகிறது.
கபடி விளையாட்டை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கிய படம் வெண்ணிலா கபடி குழு. கிராமத்து வாழ்க்கையை எந்த மசாலாவும் இல்லாமல் இயக்கி இருந்ததால் படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை போல தற்போது கால்பந்தை மையமாக வைத்து அவர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் சாம்பியன். களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. ரோஷன் நாயகனாகவும், மிருணாளினி நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஹரிஷ் உத்தமன், ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர்.
முதலில் இப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் ஏற்கனவே நான் மகான் அல்ல, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர் ஆகிய படங்கள் உருவாகி இருந்தது. பாடலும் பல தரப்பிலும் சக்கை போடு போட்டது. இதனால், சாம்பியன் படத்தில் இவர்கள் கூட்டணி அறிவிக்கப்பட்டதும் ரசிகர்களிடம் செம எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் திடீரென யுவன் ஷங்கர் ராஜா சாம்பியன் படத்தில் இருந்து விலகினார். கோலிவுட் ரசிகர்களுக்கு இந்த செய்தி பெரும் ஏமாற்றத்தை தந்தது. இவருக்கு பதிலாக இசையமைப்பாளர் அரோல் குரோலியை ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்நிலையில், திடீரென யுவன் தன் படத்தில் இருந்து விலகியதன் காரணத்தை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், யுவன் ஷங்கர் – உடன் சாம்பியன் படத்தில் நான் பணியாற்ற முடியவில்லை… யுவன் ரசிகர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்… யுவனுடன் நான் பணியாற்ற முடியாத சூழ்நிலைக்கு காரணம் இப்பொழுது யுவனை சுற்றியுள்ள நண்பர்கள் தான் (புதிய நண்பர்கள்) காரணம்… இந்த தகவலை கூட நான் யுவனிடம் கூற முடியவில்லை. எதிர்காலத்தின் உறுதியாக நான் யுவனுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன் எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்த ட்வீட் தற்போது கோலிவுட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
