fbpx
Connect with us

Cinemapettai

‘அப்பா மாதிரி பார்த்துக்கிட்டாங்க..!’ போராட்டக் களத்தில் நெகிழும் கல்லூரி மாணவிகள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

‘அப்பா மாதிரி பார்த்துக்கிட்டாங்க..!’ போராட்டக் களத்தில் நெகிழும் கல்லூரி மாணவிகள்!

1965-ம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த மாணவர்கள் போராட்டத்தை நினைவுப்படுத்துகிறது, தற்போது நடக்கும் ஜல்லிக்கட்டுக்கான மாநிலம் தழுவிய மாணவர்கள் மற்றும் மாணவிகள் போராட்டம். அலங்காநல்லூரில் மாணவர்கள் மூட்டிய தீ, தமிழகம் முழுக்க பரவி வெப்பம் தகித்துக் கொண்டிருக்கிறது.

அரசு, தனியார் என அனைத்துக் கல்லூரி மாணவர்களும், தங்களது உரிமையை மீட்டெடுக்க வீதிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் களத்தில் இறங்கியிருப்பதில் இருந்தே போராட்டத்தின் வீரியத்தை நாம் உணர்ந்து கொள்ளலாம். புதுச்சேரி ஏ.எஃப்.டி மைதானத்தில் மூன்றாவது நாட்களாக தொடரும் போராட்டத்தில் இருந்த பெண்களிடம் பேசினோம்.

பவித்ரா, பி.டெக் மாணவி :

”ஆண்களுடன் போராட்டத்தில் கலந்து கொள்கிறாயே சரி வருமா? என்று போராட்டத்தில் கலந்து கொள்ளப் போகும்முன் என்னிடம் கேட்டார்கள் சிலர். உண்மையில் எனது குடும்பத்தில் இருக்கும் பாதுகாப்பு எனக்கு இங்கு கிடைக்கின்றது. இந்த போராட்டக் களத்தின் வியூகத்தைப் பார்த்து, என் அம்மாவும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். சென்னையில் எங்கள் சகோதர, சகோதரிகள் தொடங்கியப் போராட்ட தீ எங்களை உசுப்பேற்றியது. அந்த தீயை வீரியம் குறையாமல் எப்படி கடத்தி செல்வது என்று நண்பர்களுடன் கலந்தாலோசித்து இந்தப் போராட்டத்தை செயல்படுத்தினோம்.

புதுச்சேரியில் முதல் போராட்டமே நாங்கள் ஆரம்பித்ததுதான். ஒன்றன்பின் ஒன்றாக எங்கள் சகோதர, சகோதரிகள் அதில் தங்களை இணைத்துக் கொண்டுவிட்டார்கள். ஆண்கள் என்றாலே பெண்களை கேலியும் கிண்டலும் செய்வார்கள் என்ற கூற்றை இங்கிருக்கும் எனது சகோதரர்கள் உடைத்தெரிந்து விட்டார்கள். இங்கிருக்கும் என் அண்ணன்கள் தம்பிகளுக்கு சாப்பாடு இல்லையென்றாலும், கிடைக்கும் சாப்பாட்டை எங்களுக்கு முதலில் தந்துவிடுகிறார்கள். வெளிச்சம் குறைவான இடத்தில் நாங்கள் சாப்பிடும்போது எங்களுக்கு செல்போன் டார்ச் அடித்துக் கொண்டு நிற்கிறார்கள். இந்த உறவுக்கு பெயர் இல்லை” என்றார்.

நந்தினி ராதாகிருஷ்ணன்:

”முதலில் பீட்டா அமைப்பைத் தடை செய்துவிட்டு எங்கள் பாரம்பர்யமான ஜல்லிக்கட்டை அரசு மீட்டுத் தர வேண்டும். வீரம் செறிந்த எங்களின் தமிழ் கலாசாரத்தை அடியோடு அழித்துவிட நினைக்கின்றது பீட்டா நிறுவனம். வெறும் 200 ஊழியர்களைக் கொண்டிருக்கும் அந்த நிறுவனம் எங்களின் அடையாளத்தை அழிக்க முயற்சிப்பதை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால்தான் நாடு முழுக்க இந்த உணர்ச்சி மிகுந்த போராட்டத்தை எங்கள் சகோதர, சகோதரிகள் முன்னெடுத்திருக்கிறார்கள். இரண்டு நாட்களாக இந்தப் போராட்டக் களத்தில் இங்கிருக்கும் அனைவருமே எனது அண்ணன் தம்பிகளாக மாறி அக்கறையைக் காட்டுகிறார்கள். நாங்கள் நடக்கும்போது இருபுறமும் தங்களது கைகளை சங்கிலியாக பிணைத்து அழைத்து செல்லும் தருணத்தில் எல்லாம் என் அப்பா நினைவுக்கு வந்து போவதை தடுக்க முடியவில்லை.

முதல் நாள் இரவு போராட்டத்துக்கு வந்திருந்த எங்களைப் போன்ற பெண்களை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். ஆனால் வீட்டுக்குச் சென்று தொலைக்காட்சியில் எங்கள் சகோதரர்கள் பார்க்கும் கஷ்டத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் அன்று இரவு 12 மணிக்கு திரும்பி வந்து விட்டோம். சென்னையில் வேலை செய்து கொண்டிருந்த எனது கணவரும் என்னுடன் போராட்டத்தில் கலந்து கொண்டுவிட்டார். முதல் நாள், என் குழந்தை போராட்டக் களத்தில் கீழே விழுந்து மூக்கில் அடிபட்டு இரத்தம் வந்துவிட்டது. ஆனாலும் அவனை எங்கள் பெற்றோரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு எங்கள் சகோதரர்களுடன் பெருமையுடன் இங்கே நிற்கிறேன்” என்று நெகிழ்ந்தார்.

 

பூர்ணகலா – புகைப்படக்காரர்:

”வெறும் ஜல்லிக்கட்டுக்காக மட்டுமானது அல்ல இந்தப் போராட்டம். தமிழர்களின் வீரம், உரிமைக்கானது. எங்களது நண்பர்களுடன் சிறிய அளவில் நாங்கள் தொடங்கிய போராட்டத்தில் ஒவ்வொரு ஐந்து நிமிடத்துக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். பாலினப் பாகுபாடுகள் மறைந்து இளைய தலைமுறைகளாக மட்டுமே நாங்கள் ஒன்றிணைந்திருக்கிறோம். தயக்கம் இன்றி, எம் இன மக்களுக்கான உரிமைப் போராட்டத்தில் நாங்கள் நிற்க காரணம் இங்கிருக்கும் எனது சகோதரர்கள்தான். இல்லாவிட்டால் மூன்று நாட்களாக நடக்கும் இந்த போராட்டம் சாத்தியமில்லாமல் போயிருக்கும். அந்த அளவிற்கு கண்ணியத்தை கடைபிடிக்கிறார்கள். எங்களுக்காக ஒரு கார் எப்போதும் நிற்கிறது. அவசர தேவைகளுக்கு அது மூலமாக வீட்டுக்கு சென்றுவிட்டு பிறகு இங்கே வந்து அமர்ந்து கொள்கிறோம். இப்படிப்பட்ட பாதுகாப்பை யார் தருவார்கள் சொல்லுங்கள். இதுவே எங்களுக்கான எனர்ஜியை பலமடங்காக உயர்த்துகிறது. எங்கள் கலாசாரத்தின் மீது கை வைக்க, அதை அழிக்க நினைக்க பீட்டா யார் ? பீட்டாவை விரட்டி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும்வரை நாங்கள் போராட்டத்தை கைவிடப்போவது இல்லை. இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் தொய்ந்து போனது இல்லை என்பது கடந்தகால வரலாறு” என்றார் ஆவேசமாக.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top