‘தொட்டதெல்லாம் வெற்றி..’ இந்தக் காரணங்களுக்காகத் தான் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? அவருக்கு உள்ள சவால்கள் என்ன?

தமிழ்நாட்டில் துணைமுதல்வராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் அவர் துணைமுதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன.

தமிழக அரசியல் வானில் யாரும் புதிதாக வந்துவிட மாட்டார்களா? என்று மக்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக் கின்றனர். இதனால் புதிதாக அரசியலில் குதிக்கும் அரசியல் வாதிகள் மீதும் அவர்கள் கொண்டிருக்கும் கொள்கைகள் மீதும், தேர்தல் நேரத்தில் அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் மீதும் பெரும் எதிர்பார்ப்புகள் எழுவது வாடிக்கைதான். இருப்பினும் திராவிட கட்சிகளின் மீதான செல்வாக்குதான் இங்குள்ளது.

திராவிட கட்சிகளே இங்கு ஆட்சியில் இருக்கும் நிலையில், அவர்களின் அறிவிப்புகள், புதிய கட்சி அரசியல்வாதிகளைக் காட்டிலும் ஆதிக்கம் செலுத்தி மக்களைக் கவருவதால் அவர்களுக்கே தேர்தலில் அதிக ஓட்டுகள் விழுந்து ஆட்சியும் அவர்கள் கைகளுக்குச் செல்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து மீடியாக்களில் செய்திகள் வெளியான போதிலும் திமுக தரப்பில் எந்த பதிலும் கூறவில்லை. விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால், முதல்வர் மு. க.ஸ்டாலினிடம், அமைச்சர் உதய நிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் கோரிக்கை வலுத்துள்ளதே என்று கேட்டதற்கு, வலுத்துள்ளது, ஆனால் பழுக்கவில்லை என்று கலைஞர் பாணியில் பதில் கூறினார். ஏற்கனவே இதுகுறித்த தகவல்களில் பவனி வந்த நிலையில், இது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் கொடுத்துள்ள நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுனர் ஆர்.என். ரவி அனுமதி அளித்ததாகவும், இதில், துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினும், செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவி ஏற்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இன்று துணை முதல்வராகப் பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின், மூத்த தலைவர்களான துரைமுருகன், கனிமொழி எம்பி., திமுக தலைவர்களின் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துப் பெற்று வருகிறார்.

தமிழ்நாடு பாஜகவில் அண்ணாமலை இளம் தலைவராக கட்சியை முன்னெடுத்து வரும் நிலையில், திமுகவிலும் இளம் தலைவர்களுக்கு வழிவிடும் நோக்கில் இம்மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘’சமீபத்தில் முடிந்த மக்களவை தேர்தலிலும் திமுக கூட்டணி 40 தொகுதிகளில் வென்றதற்கு உதயநிதி ஸ்டாலினின் பங்களிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தலையிட்ட எல்லாமும் வெற்றியாக அமைந்தததும் காரணமாக கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில், பார்முலா 4 கார் பந்தயத்திற்கு பல தடைகள், விமர்சனங்களை தாண்டி அவர் சிறப்பாக அதை நடத்திக் காட்டியதற்காகவும், இளம் தொண்டர்களுக்கு காலத்தின் மாற்றத்திற்கேற்ப அவரது வழிகாட்டலும் கட்சிக்கு தேவைப்படும்’’என்ற நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இம்முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதுவரை அமைச்சராக சிறப்புடன் பணியாற்றிய உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் துணைமுதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. உத்தரபிரதேசத்தில் அகிலேஸ் யாதவ், , பீகாரில் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இளம் தலைவர்களாக இருந்து துணை முதல்வர்களாகப் பதவி வகித்திருந்தனர். இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் இளம் முதல்வராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் மீது ‘வாரிசு’ என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் இதைத்தாண்டி அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்யப்போகிறார் என்பதில்தான் எதிர்கட்சிகளுக்கான அவரது பதிலாக இருக்கப் போகிறது. அதேசமயம் ‘அரசியல் சாணக்கியர்’ என்று பெயரெடுத்த அவரது தாத்தா கலைஞர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பெயரையும், அவர்களின் அரசியல் பயணத்தின் தொடர்ச்சியையும் பின்தொடர்வதிலும் அவருக்கு முன் உள்ள சவால்கள் ஆகும்.


- Advertisement -spot_img

Trending News