Connect with us

Cinemapettai

மெரினா போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் இவர்கள்தான்! உளவுத்துறையின் ரிப்போர்ட் என்ன சொல்கிறது?

Cinema News | சினிமா செய்திகள்

மெரினா போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் இவர்கள்தான்! உளவுத்துறையின் ரிப்போர்ட் என்ன சொல்கிறது?

மெரினா போராட்டம் உலகத் தமிழர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ள நிலையில் அதை ஒருங்கிணைத்தவர்களின் பட்டியலை உளவுத்துறை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தினர். இதன்விளைவு தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. தொடர்ந்து சில இடங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டது. இருப்பினும் மெரினாவில் திரண்ட ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முழுவதுமாக போராட்டத்தைக் கைவிடவில்லை. இது போலீஸாருக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது.

மெரினாவில் நடக்கும் போராட்டக்குழுவினரை வெளியேற்ற வேண்டும் என்று போலீஸ் உயரதிகாரிகளுக்கு ஆட்சியாளர்களிடம் இருந்து உத்தரவு வந்தது. இதன்பிறகு அமைதியாக காவல்காத்த போலீஸார் அதிரடியாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுடன் மல்லுக்கட்டத் தொடங்கினர். சென்னை முழுவதும் களேபரமானது. வியாசர்பாடி, வடபழனி, எழும்பூர் ஆகிய இடங்களில் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. தீயணைப்பு வாகனம், பத்திரிகை நிறுவன வாகனம், அரசு பஸ்கள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன.

போராட்டத்தில் ஐஸ்ஹவுஸ் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதற்கிடையில் மெரினாவுக்கு செல்ல முயன்ற போராட்டக்குழுவினர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டதோடு அடித்தும் விரட்டப்பட்டனர். காலையில் தொடங்கிய போலீஸ் ஆபரேசன் நள்ளிரவு வரை நீடித்தது. போராட்ட நிகழ்வு குறித்து விசாரணை நடந்து வருகிறது. யாரெல்லாம் இந்த போராட்டக்களத்தில் வன்முறையில் ஈடுபட்டனர் என்ற விவரங்களை உளவுப்பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர். போராட்டங்கள் நடந்த இடங்களிலிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சி பதிவுகள் அனைத்தும் உளவுத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் உள்ளன. அதன் அடிப்படையில் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் அரசியல் கட்சிகள் தொடங்கி போராட்டக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் போராட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்வுகள் குறித்து உள்துறை அமைச்சகம், தமிழக ஆளுநரிடம் விளக்கம் கேட்டுள்ளது. உடனடியாக முழுவிவரங்கள் அடங்கிய அறிக்கை உள்துறை அமைச்சகத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மத்திய உளவுத்துறையும், தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளை அறிக்கையாக மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கை குறித்து பேசிய மத்திய உளவுத்துறை உயரதிகாரி ஒருவர், “மெரினா உள்பட தமிழகம் முழுவதும் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த விவரங்களை சேகரித்துள்ளோம். தலைமையே இல்லாமல் இந்தளவுக்கு கூட்டம் கூடியதற்கு யார் காரணம் என்பதுதான் எங்களது கேள்வியாக இருந்தது. தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களின் பட்டியலில் வெளிநாடுகளிலிருந்தும் சிலர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இதற்கு ஆதாரமாக சென்னை மெரினாவிலிருந்து சில தடயங்களை சேகரித்துள்ளோம். மேலும் போராட்டக்குழுவினருடன் நாங்கள் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமாக உள்ளது. ஏனென்றால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மத்திய அரசின் தலையீடு தமிழகத்தில் அதிகமாக இருந்தது. இதை மாநில அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் விரும்பவில்லை. இந்த சமயத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதும் தமிழர்கள் அனைவரும் எரிமலையாக பொங்கி எழுந்து விட்டனர்.

போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களின் செல்போன் அழைப்புகளை ஆய்வு நடத்திய போது சிலருக்கு வெளிநாடுகளிலிருந்து அழைப்புகள் வந்துள்ளன. மேலும், அவர்களது வங்கிக் கணக்குக்கு பணமும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் யார் என்று விசாரித்தால் அவர்களும் தமிழர்கள் என்ற தகவலே கிடைத்துள்ளது. மதுரை அவனியாபுரத்தில் உள்ள டாக்டர் ஒருவர் உக்ரைன் நாட்டில் பணியாற்றுகிறார். அவரும் வாட்ஸ்அப்பில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை அங்கிருந்தபடியே மதுரையில் ஒருங்கிணைத்துள்ளார். சென்னையில் உள்ள தன்னார்வலர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள் பட்டியலில் அரசியல் கட்சி பிரமுகர்களும் இருக்கின்றனர். அவர்களின் பெயர் பட்டியல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், மெரினாவுக்குள் போராட்டக்குழுவினருடன் மத்திய அரசை எதிர்க்கும் கும்பல்களும் புகுந்திருக்கின்றனர். அதற்கு ஆதாரமாக அவர்கள் போராட்டக்களத்திலிருக்கும் வீடியோ, புகைப்படங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. அவர்கள் குறிப்பாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளனர். இவை அனைத்தையும் மத்திய அரசுக்கு சமர்பித்துள்ளோம். அங்கிருந்து வரும் உத்தரவுக்குப் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் தமிழர் என்ற உணர்வோடு ஒன்று கூடியவர்கள் அமைதியாகவும், அறவழியில் போராடினார்கள். அவர்களுடன் சில விஷமிகள் புகுந்ததே தமிழகம் முழுவதும் நடந்த வன்முறைக்கு காரணம் என்று அறிக்கையை தயாரித்து இருக்கிறது மாநில உளவுத்துறை போலீஸ்.

சென்னை மெரினா நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த எஸ்.ஏ.மகேஷ் கூறுகையில், “ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவன். இந்த போராட்டத்தால்தான் அவசரச் சட்டத்தை மாநில அரசு இயற்றியது. ஒருங்கிணைந்து போராடியதால் மத்திய அரசு, அவசரச் சட்டத்துக்கு எந்த தடையும் செய்ய முடியவில்லை. அமைதியாகவும், அறவழியாகவும் நடந்த இந்த போராட்டத்தில் கடைசி நாளில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தது துரதிஷ்டவசமானது. போராட்டக்குழுவில் உள்ளவர்களை போலீஸார் வன்முறையாளர்களைப் போல சித்தரிப்பது வேதனைக்குரியது. சாதி, மதம் என எல்லாவற்றையும் மறந்து போராட்டத்தில் ஒற்றுமையாக ஈடுபட்டனர். அரசியல் சாயம் பூசப்படக்கூடாது என்பதில் ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருந்தனர்” என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top