விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன் நடிக்கும் தெறி படத்தை ராஜா ராணி அட்லி இயக்குகிறார், ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக லடாக்கில் நடந்து வந்தது. விஜய் எமி ஜாக்சன் நடித்த பாடல் காட்சியுடன் படப்பிடிப்புகள் முடிந்து லடாக்கிலேயே பூசணிக்காய் உடைத்து விட்டார்கள். படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார் அட்லி.

வருகிற 25ந் தேதி முதல் டப்பிங் பேசுகிறார் விஜய். அதன் பிறகு குடும்பத்துடன் முதலில் லண்டனில் உள்ள மாமனார் வீட்டுக்குச் செல்கிறார். அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு சென்று ஓய்வெடுக்கிறார். கடந்த சில வருடங்களாகவே விஜய் ஓய்வெடுக்காமல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. விடுமுறை முடிந்து திரும்பியதும் அழகிய தமிழ் மகன் பரதன் இயக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

தெறி படத்தின் பணிகளை வேகமாக முடித்து ஏப்ரல் 14ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று திரைக்கு கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள். தெறி, மற்றும் ரஜினி நடிக்கும் கபாலி படத்தையும் கலைப்புலி எஸ்.தாணுவே தயாரிக்கிறார். தெறி தமிழ் புத்தாண்டுக்கு வந்தால் கபாலி தள்ளிப்போகும் என்று தெரிகிறது.