Theri Movie Review

தெறி விமர்சனம்

‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிப்பில் அட்லி இயக்கத்தில், ‘இளைய தளபதி’ விஜய், சமந்தா, எமி ஜாக்‌ ஷன், பிரபு, ராதிகா, ‘மொட்ட’ ராஜேந்திரன்… உள்ளிட்ட மாஸ் நட்சத்திரங் களுடன் பெரும் இயக்குனர் ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரனும் முக்கிய பாத்திரத்தில் முதன்முதலாக நடித்திருக்கும் பக்கா ஆக் ஷன் அன்லிமிடெட் கமர்ஷியல் படமே ‘தெறி’. ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையில் வெளிவந்திருக்கும் 50-வது படமும் கூட ” தெறி” என்பது மேலும் சிறப்பு.

“தெறி” கதைப்படி, நேர்மையும், நீதியும் ‘தெறி’க்கும் விஜயக்குமார் எனும் ஐ .பி.எஸ். ஆபிஸர் விஜய்! அவரது போலீஸ் லிமிட்டில் உள்ள ஏரியா பெரிய மனிதர் ‘உதிரி பூக்கள்’ மகேந்திரன். அவரது மகனின் அட்டகாசமும், அயோக்கியத்தனமும் பொறுக்காமல் ஆக் ஷனில் இறங்குகிறார் விஜய்! அப்பா வும், பிள்ளையும் எப்படி எல்லாம் விஜய்யை எதிர்க்கின்றனர்.? அவர்களை விஜய் எப்படி அதிரடியாய் சமாளிக்கிறார்…? எனும் ஆக் ஷன் கதையுடன் விஜயகுமார் ஐ.பி.எஸ். அல்லாது, ஜோசப் குருவில்லா, தர்மேஷ்வர் என இன்னும் இரண்டு விஜய்கள்.. அவர்களுடனான சமந்தா, எமி ஜாக்ஸன், பேபிநைனிகா உள்ளிட்டோரின் காதல், நேசம், பாசம்… உள்ளிட்டவைகளையும் கலந்து கட்டி நல்ல மெஸே ஜுடன் கூடிய பக்கா கமர்ஷியல் ஆக் ஷன் படம் தந்திருக்கிறது விஜய் – அட்லி கூட்டணி!

விஜய், விஜயக்குமார் ஐ.பி.எஸ், ஜோஸப் குருவில்லா, தர்மேஷ்வர் ஆகிய மூன்று வித கெட்-அப்புகளிலும், கேரக்டர்களிலும் வழக்கம் போலவே தன் பாணியில் வாழ்ந்திருக்கிறார். மிடுக்கான போலீஸ் ஆபிஸராக, மலையாளி ஜோஸப் குருவில்லாவாக, தர்மேஷ்வராக…. முப்பரிமாணங்களிலும் விஜய், வித்தியாசம். அதிலும், அப்பா, மகள் செண்டிமெண்ட் காட்சிகளில் சொல்லவே தேவை இல்லை. மிரட்டியிருக்கிறார்கள் விஜய்யும், அவரது ஆசை மகளாக வரும் நைனிகாவும்!

இரு நாயகிகளில் முதல் நாயகி சமந்தா, விஜய் ஜோடியாக டாக்டராக கச்சிதம். அவரது காஸ்ட்யூம்கள் அவரை விட கனகச்சிதம். விஜய்யிடம் எனக்கு இங்கிலீஷ்ல பிடிக்காத வார்த்தை ஒன்னுதான்.. என சமந்தா சொல்ல, அது சாரி …. தானே..? என விஜய் கேட்க, இல்ல, போலீஸ் எனும் இடத்தில் சமந்தா ரசனை. இது மாதிரி படம் முழுக்க பல இடங்களிலும் ரசிகனை மயக்கும் குறும்பு வாசனை.

இப்படி, சமந்தா விஜய் மனதை கொள்ளை கொள்கிறார் என்றால், நைனிகாவின் டீச்சராக மலையாளி பெண்குட்டியாக வரும் எமி ஜாக்ஸன், மெச்சூரிட்டியான ரோலில் ரசிகனை கொள்ளை கொள்கிறார். வாவ்!

சாவு நமக்கு நடக்கறப்போ வலிக்கிறது தெரியாது… நம் சம்பந்தப்பட்டவர்களுக்கு நடக்கிறப்போ, நமக்கு எப்படி வலிக்கும் தெரியுமா? என்று பன்ச் பேசியபடி மகனின் அயோக்கியத்தனங்களுக்கு துணை நிற்கும் மகேந்திரன், நடிப்பிலும் தான் ஒரு லெஜண்ட் என நிருபித்திருக்கிறார்.

படத்தில் விஜய்யின் செல்ல மகளாக வரும் நைனிகா, நிஜத்தில் மாஜி நாயகி மீனாவின் மகளாம். பேபி, 16 அடி பாய்ந்திருக்கிறார். பலே!

பிரபு, ராதிகா, அழகம்பெருமாள், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட மற்ற கேரக்டர்களும் கச்சிதம். அதிலும், செம சிரிப்பு மூட்டும் வெறும் கமெடியனாக மட்டுமில்லாமல் படத்தை இன்டர்வெல் வரை எமோஷனலாக இழுத்து செல்லும் ராஜேந்திரன் சுவாரஸ்யம்!

இப்பட தொடக்கத்தில் இருந்தே பாடல்களில் மிகவும் கவனம் செலுத்துகின்றேன், இளைய தளபதி ரசிகர்களுக்கு மட்டும் இல்லாது எல்லோரையும் ஈர்க்கும் வண்ணம் ‘தெறி’ படத்தின் பாடல்கள் இருக்கும் என்று சொல்லிக் கொண்டே இருந்த நம்ம ஜீ.வி, அதை செய்தும் காட்டி இருக்கின்றார். ‘செல்லக்குட்டி …’, ‘ஜித்து ஜில்லாடி ..’ உள்ளிட்ட பாடல்கள் ஹிட்டோ ஹிட் அதிலும் ‘ஈனா.. மீனாடீக்கா…’ பாடல் ரசனையின் உச்சக்கட்டம்!

ஜார்ஜ் C.வில்லியம்சின் ஒளிப்பதிவும் படக்காட்சிக்காகவும், பாடல் காட்சிகளுக்காகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் லொகேஷன்களும் ஆஹா, ஓஹோ!

படத்தின் கதையும் சரி, படம் காட்சியாக்கப்பட்டிருக்கும் விதமும் சரி… பெரிதாக குறை சொல்லும்படி இல்லை… அதற்கு சின்ன உதாரணம், எந்த முன்னணி ஹீரோவின் படம் வந்தாலும் தங்களது ஹீரோவின் அறிமுக காட்சி எப்படி இருக்கும்? என்பதே பெரும்பாலான ரசிகர்களில் ஆவலாக இருக்கும். அந்த விதத்தில் முற்றிலும் புதுமையாக, தெருவின் ஓரத்தில் பைக் ரிப்பேராகி நிற்கின்றது. மகள் திட்டிக்கொண்டே நிற்கின்றாள்… திடீரென பின்னனி இசையில் மெல்லிய ஒரு சீறல்… சீட்டுக்கு அந்தப்பக்கம் உக்காந்து பைக்கை ரிப்பேர் பார்த்துட்டு இருந்த ‘இளைய தளபதி’ விஜய் சற்றே தலையை தூக்கிப்பார்க்கின்றார். இப்படித்தான் சிம்பிளாக இருக்கிறது ஹீரோ என்ட்ரி எனப்படும் விஜய்யின்அறிமுககாட்சி. இது, விஜய் ரசிகர்களைக் காட்டிலும் எல்லாத் தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவருமென்று இயக்குனர் அட்லி உணர்ந்தே வைத்திருப்பார் போலும்!

விஜய் மாதிரி மாஸ் ஹீரோ நடித்திருககும் இது மாதிரியான ஒரு எனர்ஜிடிக் ஆக் ஷன் கமர்ஷியல் படத்தில், குழந்தைகளை சமூக பொறுப்புணர்வுடன் வளர்க்க வேண்டும் எனும் அழகிய மெஸே ஜையும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் காட்சிகளையும் அழகாக திணித்திருப்பதற்காகவே நாயகர் விஜய்க்கும், இயக்குனர் அட்லிக்கும், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவிற்கும் வைக்கலாம் ஒரு சல்யூட்.

Rating: 3/5