ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது ஏதும் செய்ய இயலாது என பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்திற்கு வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் மெரினாவில் குவிந்து வருகின்றனர். இரவு, பகல் பாராமல் தமிழகம் முழுவதும் போராட்டம் தொடர்கிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று நேரில் வலியுறுத்தி உள்ளார். முதலமைச்சருடனான இந்த சந்திப்பிக்கு பிறகு, பிரதமர் அளித்துள்ள விளக்கத்தில், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது ஏதும் செய்ய இயலாது என தெரிவித்துள்ளார். கலாசாரத்தின் அடையாளமாக ஜல்லிக்கட்டு இருப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கைக் காட்டி தற்போதைக்கு மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என மோடி கூறியுள்ளதால், அவசரச் சட்டம் தற்போதைக்கு வருவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

வறட்சி தொடர்பாக முதலமைச்சர் வைத்த கோரிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர், மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் வறட்சி தொடர்பாக மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.