ஒரு வெள்ளை தலித் புத்தகத்தில் உள்ள உண்மைகள்.. புல்லரிக்க வைக்கும் நாவல்

தமிழ் நாட்டில் உருவான மொழிபெயர்ப்பு இல்லாத ஒரு ஆங்கில நாவல் என்பதே இதற்குரிய முதல்மரியாதை. எனது, இளமையான இலக்கிய நண்பர் , தனது புனைப் பெயரான S.S. அர்ஜுன் என்ற பெயரில் எழுதியுள்ளார்.

தாய்மொழியில் தான் யதார்த்த உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்த முடியும். ஆனால், ஆசிரியர் ஆங்கிலத்தில் அதை செய்திருப்பது அழகு. சுற்றி வளைக்காமல் சுருக்காக வசனங்களை எளியநடையில் இனிதாக எழுதியுள்ளார். இது அவருடைய ஆங்கில ஆற்றல் அருமை.

கதை, சமுதாய அக்கறை சீர்திருத்தம் சார்ந்து பயணிப்பதால், பெரிய கற்பனையோ திடீர் திருப்பங்களோ இல்லாமல் எளிய கதை அம்ச நாவலாகவே நகர்த்தி இருக்கிறார் நன்று. கதை களம், கடலூர் மவட்டத்தில் கற்பனை பாத்திரங்களை கொண்டு சில நிஜங்களை சாடுகிறது.

வன்னியர்- தலித் சமுதாயத்தின் உரசல்களை கூறுகிறது. அதே சமயம், அவர்களின் ஒற்றுமைக்கு அங்கு மிஸ்ஸாகிற ஒரு விஷயத்தையே கதையின் முடிவில், சிறுவன் நீதியின் முன் நிரபராதியாகி விடுதலை பெற ஒரு உத்தியாக ஆசிரியர் பயன்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.

உணவு விடுதியில் செக்கச்செவேலென இருந்த ஒரு வடநாட்டானை தலித் சிறுவன் பார்த்துவிட்டு, தன் கருமையும் அறுகோணமுமான முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது, தாழ்வுகொள்வதும் கண்ணாடி தன்னை ஏளனமாகப் பார்த்து சிரிக்கவில்லை என தனக்குத்தானே ஆறுதல் பெறுவதும் இந்த சமுதாயம், அதற்கு முன் அவன் முகம் நோக்கி எறிந்த ஏளனச் செயல்களை எழுந்து நிற்கச் செய்கிறது.

கிராமங்களில் நடக்கும் பிரச்சினைகளில் சரி தவறுகள் எது என, எல்லோருடைய மனசாட்சிக்கும் எளிதாக விளங்கினாலும் அவரவர் சார்ந்த சமூகத்தின் அடிப்படையில் ஆதரவு பெருகுவதும் அருகுவதும் இயல்பு. இதுதான் சாதி அமைப்பின் உலகமகா பயன்பாடு.

ஆதரவு பின்புலம் இல்லாத நிலையில் ஒரு சிறுவன் என்றும் பாராமல், காவல்துறை எவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறது என்பதை பதைபதைப்போடு விதைத்திருப்பது களை எடுக்கும் முயற்சி. கள்ளச்சாராயம் சாப்பிட்டு 20 பேர் பலியாவதுதான் கதையின் மையக்கருவாக உருவெடுக்கிறது.

அந்த சம்பவம் உள்நோக்கம் வஞ்சகம் இல்லாமல், ஒரு விபத்தாகவே நடக்கிறது. அதுவரை தொழில் தோழர்களாக இருந்த இருவரை, அவர்கள் சார்ந்த ஜாதி இருதுருவங்களாக பிரிக்கிறது. இறுதியில் உண்மை, மனசாட்சி, நட்புக்கு முன் போலியான ஜாதி வேலிகள் கல் விழுந்த கண்ணாடி போல பொலபொலவென விழுகிறது.

ஆசிரியர் இந்த இரு சமுதாயத்தையுமே சாராதவர். பாதிக்கப்பட்ட சமுதாயாத்திற்கு பக்கபலமாக இருப்பது பாரபட்சம் அல்ல, தர்ம யுத்தம். ஜாதி வேற்றுமை பதிவில் எழுகிற பாரபட்சம் மனிதராக பதிகிறபோது எழுவதில்லை.

the-white-dalit-noval-in-english
the-white-dalit-noval-in-english

” ஒரு வெருளி தன்னுடைய அறியாத செயலால், ஒரு பெரிய குற்றத்திற்கு காரணமாகிவிட்டால், அவனுக்கும் தண்டனை உண்டு என சட்டம் சொன்னால், அவ்விடத்தில் அந்த வெருளியை போலவே சட்டத்திற்கும் திருத்திக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது”. இந்த உயர்ந்த நெறியே ஒரு நாவலாக விரிவடைந்திருக்கிறது.

இந்த வெள்ளை நோக்கம் ஆங்கிலம் என்பதால், வெங்கலமாக உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கப்போகிறது. ஆசிரியரை வாழ்த்துகிறேன். புத்தக பிரியர்கள் இதை வாங்கி வாசிக்க வழிமொழிகிறேன்.

உண்மை அன்புடன்
மரு சரவணன்
சென்னை