ஸ்ரீநகர்: உப்பு வாங்குவது முதல் கார், ஏசி என்று உல்லாச வாழ்க்கை வாழ்வது வரை, எந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி என்பதை இன்று ஸ்ரீ நகரில் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்புக்கு வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), ஜூலை 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட இருக்கிறது. இதில் வரி விதிப்பு 5, 12,18, 28 சதவீதம் என 4 பிரிவாக இருக்கும்.

எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிப்பது என ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் பால், பழம், காய்கறி உட்பட குறைந்தபட்சம் சுமார் 100 பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிகிறது.

ஸ்ரீநகரில் கூட்டம்

2 வாரங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறுகையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இந்த மாதம் 18, 19 தேதிகளில் நடக்கிறது. அப்போது வரி விதிப்புகள் இறுதி செய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். இதன்படி, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஸ்ரீநகரில் இன்று, நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் தொடங்குகிறது.

பலத்த பாதுகாப்பு

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி ஆயிரம் பேரும், மாநிலங்கள் மற்றும் நிதி மற்றும் வரிகள் விதிப்புத் துறை சார்ந்த பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் தங்குவதற்கான ஹோட்டல்கள் போன்ற இடங்களில் சுமார் 400 பேரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

வரிவிலக்கு

2 நாட்கள் நடக்கும் கூட்டத்தில், வரி விதிப்பு முழுமையாக இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு வரியில் 299 பொருட்களுக்கும், மாநில வரிகளில் 99 பொருட்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பழங்கள், காய்கறிகள், முட்டை, டீ, காபி உள்பட பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவு பொருட்கள் உட்பட சுமார் 100 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

குறைவான வரி

இதுபோல் 60 வகையான சேவைகளுக்கும் விலக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளும் உள்ளன. இதுமட்டுமின்றி தொழில்துறை தரப்பிலும் வரி விலக்கு அல்லது குறைந்த வரி விதிக்குமாறு கோரிக்கைகள் குவிந்துள்ளனன. இவை அனைத்தும் இந்த 2 நாள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.