கதிராமங்கலத்தில் போலீஸ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் மீது, போலீசார் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஒஎன்ஜிசி குழாயில் திடீரென ஏற்பட்ட வெடிப்பால் அப்பகுதியில் எரிபொருள் கசிவு ஏற்பட்டது.

இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று ஏற்பட்ட கசிவால் அப்பகுதி முழுவதும் எண்ணெய் படலமாக காட்சி அளித்தது. இதனை பார்த்த மக்கள் கொந்தளிப்புடன் இருந்தனர்.

எங்களின் எதிர்ப்பையும் மீறி ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எப்படி அரசு அனுமதிக்கலாம் என்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் போராட்டம் நடக்கும் கிராமத்திற்குள் நுழைந்தனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அப்போது எண்ணெய் கசிந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. தடியடியை கண்டித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது.

மேலும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.