Tamil Cinema News | சினிமா செய்திகள்
மூன்று தென் மாநில முதல்வராக நடித்த ஒரே பிரபலம்.. யார் தெரியுமா?
முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாக இருக்கும் ஒரு படத்தில் மம்முட்டி கேரள முதல்வராக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருக்கும் மம்முட்டி மலையாளம், தமிழ் மற்றும் இந்தி என சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் இதுவரை நடித்துள்ளார். இதுவரை மூன்று தேசிய விருதையும், ஏழு முறைக்கு மேல் பிலிம்பேர் விருதையும் பெற்று இருக்கிறார். வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நாயகர்களில் முதன்மையானர் மம்முட்டி. தற்போது அங்கிள், பேரன்பு, அபிராமிண்டே சந்ததிகள், ஒரு குட்டநட்டன் ப்ளாக், மாமாங்கம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மம்முட்டி அரசியல் த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ‘சிரகொண்டிச கினவுகள்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு பாபி சஞ்சை கதை எழுதி இருக்கிறார். படத்தை இயக்குனர் சந்தோஷ் விஸ்வநாத் இயக்குகிறார்.
இப்படத்தில் மம்முட்டி பெரிய அரசியல் தலைவராகவும், கேரள முதல்வராகவும் நடிக்க இருக்கிறார். ஆனால், இது எந்த உண்மை சம்பவத்தை பற்றியும் காட்சிப்படுத்தப்படவில்லையாம். முழுவதும் மம்முட்டி ரசிகர்களுக்காவே அவரின் வித்தியாசமான நடிப்பை சொல்லும் மற்றொரு படைப்பாகவே இது உருவாக இருப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு சுவாரசியமான செய்தியும் இருக்கிறது. 1995ம் ஆண்டு மக்கள் ஆட்சி படத்தில் மம்முட்டி தமிழக முதல்வராக நடித்து இருந்தார். அதை போல, தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ‘யாத்ரா’ படத்தில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது கேரளா முதல்வராக நடிப்பதால், 3 தென் மாநில முதல்வராக நடிக்கும் வாய்ப்பை பெறும் முதல் நடிகர் என்ற சிறப்பை பெற்று இருக்கிறார்.
