Tamil Cinema News | சினிமா செய்திகள்
துணிச்சலுக்கு பெயர் போன பார்வதியின் புது ஹேர்ஸ்டைல்.. ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை பார்வதியின் புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்த பார்வதிக்குத் தமிழில் அறிமுகம் தேவையில்லை. சசி இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பூ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அவர். திருவனந்தபுரத்தில் கல்லூரி படிப்பை முடித்த பார்வதி, கிரண் டிவியில் தொகுப்பாளினியாகத் தனது பயணத்தைத் தொடங்கினார். அதன்பின்னர், ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிய நோட்புக் படம் மூலம் மல்லுவுட் பயணத்தை அவர் தொடங்கினார். மோதிரக் கையால் குட்டு பெறுவது என்பார்களே அதுபோல் ரோஷன் ஆண்ட்ரூஸ் அறிமுகப்படுத்திய அந்த வைரம் திரையுலகில் ஜொலிக்கத் தொடங்கியது. இளம் வயது கர்ப்பத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த படத்தில் பார்வதியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட, அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கினர்.
ஆனால், பார்வதி அவசரப்படவில்லை. நிதானமாகத் தனது படங்களை அவர் தேர்வு செய்தார். துல்கர் சல்மானுடன் அவர் இணைந்து நடித்த சார்லி படம், அவரது கதைத் தேர்வுக்கு உதாரணம். அந்த படம் கேரளாவில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் கவனம் ஈர்த்தது. கேரள அரசின் திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகை, நடிகர், இயக்குநர் உள்பட 8 விருதுகளை அந்த படம் வாரிக் குவித்தது. அதன் பின்னர் பார்வதி தொட்டதெல்லாம் பொன்னானது என்றே சொல்லலாம். பிலிம் ஃபேர் விருதுகளையும் வாங்கிக் குவித்த பார்வதியின் நடிப்புத் திறனுக்கு சரியான தீனி போட்டது எனலாம். குஞ்சாக்கோ கோபனுடன் நடித்திருந்த அந்த படத்தின் ஹீரோ, ஹீரோயின் என எல்லாமே பார்வதிதான். ஈராக்கில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் அங்கு குடும்பத்துடன் பணிபுரியச் செல்லும் நர்ஸாக பார்வதி அந்த படத்தில் நடித்திருந்தார்.
ஏற்கனெவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் கணவனை இழந்த பெண்ணாக நடிப்பில் அசத்தியிருப்பார் பார்வதி. பின்னர், தன்னுடன் பணிபுரியும் குஞ்சாக்கா கோபனைத் திருமணம் செய்த போதும், அதைத் தனது குழந்தை ஏற்றுக்கொள்ளுமா என்ற தவிப்பில் தாயாக ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டிருப்பார். பின்னர் தீவிரவாதிகளிடம் சிக்கித் தவிக்கும் சூழலிலும், தன்னுடன் சிறைபிடிக்கப்பட்ட செவிலியர்களுக்காகத் துணிச்சலாகக் குரல் கொடுக்கும் பார்வதி, அவர்களை மீட்டெடுப்பார். அந்த படம் பார்வதியை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றதுடன், தேசிய அளவில் விருதுகளையும் பெற்றுத் தந்தது. தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அவருக்கு சிறந்த நடிகை விருதும் கிடைத்தது.
திரையுலகின் பெரும்பாலான நடிகைகளைப் போலில்லாமல், கமர்ஷியல் மசாலா படங்களுக்காக சமரசம் செய்துகொள்ளாத பாணியைக் கடைபிடித்து வருபவர் பார்வதி. இதற்காக பல பெரிய நடிகர்களின் படங்களை இழந்தபோதிலும், அவற்றுக்காக வருந்தாத அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். இர்பான் கானுடன் நடித்த கிர்பி கிர்பி சிங்கிள் படம் மூலம் பார்வதி பாலிவுட்டிற்கும் சென்று விட்டார். இருப்பினும் தமிழில்தான் அவருக்கு நிலையான இடம் கிடைக்கவில்லை.
துணிச்சலான கருத்துகளுக்குப் பெயர்போன பார்வதி, திரையுலகில் பாலியல் சீண்டல்கள் இருப்பது குறித்து போல்டாக ஸ்டேட்மெண்ட் கொடுத்தவர். இந்தநிலையில், பார்வதியின் புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சம்மர் கட் பாணியில் தலையின் ஒருபுறம் முழுவதும் கட் செய்த நிலையில் பார்வதி அந்த புகைப்படத்தில் இருக்கிறார். இந்த காட்சிகள் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
