Tamil Cinema News | சினிமா செய்திகள்
கருணாநிதிக்காக தன் பிறந்தநாளை மாற்றிக்கொண்ட இசைஞானி..

இசைஞானி இளையராஜா உண்மையான பிறந்தநாளை விடுத்து இன்று ஏன் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்ற சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தவர் இளையராஜா. சிறுவயதிலேயே இளையராஜாவிற்கு ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் பெரிய ஞானம் இருந்ததாம். திரைப்பட ஆசையில் சென்னையில் இறங்கி சமயத்திலேயே, சுமார் இருபதாயிரம் இசை நாடகத்துக்கு பாடல் அமைத்த அனுபவத்தை கொண்டிருந்தார். தொடர்ந்து, தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து, லண்டனில் கிடார் தேர்வில் தங்க பதக்கம் பெற்றார். தன் திரைப்பயணத்தை எல்லா அறிவுகளை திரட்டிய பிறகே தொடங்கினார்.
அன்னக்கிளி திரைப்படத்தில் 1976ம் ஆண்டு இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தார். இளையராஜா, இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பின்னணி இசை கோர்த்துள்ளார். லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில் சிம்பொனிக்கு இசையமைத்து ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை 1993 ஆம் ஆண்டு பெற்றார். இந்திய அளவில் இசையமைப்புக்கு கொடுக்கப்படும் எல்லா விருதுகளையும் தன்வசப்படுத்தி இருக்கிறார்.
இந்நிலையில், இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஆனால், அவரின் உண்மையான பிறந்தநாள் நாளை (அதாவது ஜூன் 3) தான். அப்போ ஏன் இன்று என கேட்கிறீர்களா? அதில் ஒரு சுவாரசியம் இருக்கிறது.
தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3ந் தேதி தான். கலைஞர் அரசியலில் மட்டுமல்லாமல் சினிமா, இலக்கியத்திலும் பெரும் பங்காற்றி இருக்கிறார். அவர் தமிழுக்கு ஆற்றிய பங்கை கூட தான் இதுவரை தமிழுக்கு செய்யவில்லை என கருதுபவர் இளையராஜா. அவரின் பிறந்தநாளில் தானும் பிறந்து இருப்பது எனக்கு பெரிய பெருமை தான். ஆனால், ஜூன் 3 தமிழகம் அவரை மட்டும் வாழ்த்த வேண்டும் என்பதே என் ஆசை என தெரிவித்து இருக்கிறார். இதனால் தான் பல ஆண்டுகளாக இரண்டாம் தேதியே தன் பிறந்தநாளை சிறப்பித்து விடுகிறார்.
இளையராஜாவிற்கு இசைஞானி என்ற பெயரை வைத்தது கலைஞர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
