சாம்பியன்ஸ் டிராபி கோப்பை பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி அமைப்பு நடத்தும் 9வது சாம்பியன்ஸ் டிராபி கோப்பை அடுத்தாண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தானில் நடக்கிறது. இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் உள்ளிட்ட 9 அணிகள் இதில் பங்கேற்கின்றன.
பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் இப்போட்டி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 1996 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பாகிஸ்தானில் நடக்கும் முதல் ஐசிசி தொடர் இதுவென்பதால் அந்த நாட்டு ரசிகர்கள் குஷியாகவுள்ளனர்.
இத்தொடரில், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட மற்ற அணிகள் பங்கேற்று விளையாடுவதில் எந்த கருத்தும் தெரியவில்லை. ஆனால், இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக பாகிஸ்தான் சென்று விளையாட முடியாது என்று கூறப்பட்டது. அதன்படி, இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அமீரகத்துக்கு மற்றும் பிசிசிஐ ஐசிசியிடம் கேட்டுக் கொண்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எச்சரிக்கை!
கடந்தாண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரின்போதும் இதே மாதிரிதான் இந்திய அணி விளையாடியது. அதன்படி, இந்திய அணியின் போட்டிகள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டன. ஆனால், இம்முறை இந்திய அணி கண்டிப்பாக பாகிஸ்தான் வர வேண்டும் என இல்லையென்றால் பாகிஸ்தானும் தொடரை புறக்கணிக்கும் என எச்சரிக்கை விடுத்ததுடன், ஐசிசி மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் பாகிஸ்தான் திட்டமிட்டிருக்கிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது; “பாகிஸ்தானுக்கு வந்து விளையாட மாட்டோம் என இந்தியா மறுத்தது தொடர்பாக, ஐசிசியிடம் விளக்கம் கேட்டு நாங்கள் கடிதம் எழுதியிருக்கிறோம்.
அவர்களின் பதிலுக்காகவும் காத்திருக்கிறோம். விளையாட்டையும் அரசியலையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டும், இரண்டையும் கலக்கக்கூடாது. இந்த சாம்பியன்ஸ் கோப்பை விவகாரத்தில் எல்லாம் சரியாக நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து இந்திய அணிக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் அடுத்து, ஐசிசி என்ன முடிவு எடுக்கும், இதற்கு உலகின் செல்வாக்கு படைத்த பிசிசிஐ என்ன பதில் அளிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேசமயம், கடந்தமுறை நடந்த மாதிரியே இந்திய அணியின் போட்டிகளை பொதுவான ஒரு நாட்டில் நடத்துவதில் என்ன பிரச்சனை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.