கபாலி படத்துக்குப் பிறகு ரஜினி – ரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் காலா. தனுஷின் வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பின்னர் வெளிவரும் முதல் படம் என்பதால், காலா படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்துக்குப் பிறகே காலா வெளிவரும் என்று கூறப்பட்ட நிலையில், அந்த படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடிய காலதாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், காலா படம் 2.0 படத்துக்கு முன்னதாகவே வெளியாகிறது. முதலில் ஏப்ரல் இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திரைத்துறை வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் படம் ஜூன் மாதத்திற்குத் தள்ளிப்போனது. படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் படத்தின் இசைவெளியீட்டு விழா மிகபிரமாண்டமாய் நடத்தி முடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ரஜினி ரசிகர்கள் கூட்டத்தையும் ஆர்வத்தையும் பார்த்து மகிழ்ச்சியடைந்து, இது படத்தின் இசை வெளியீட்டு விழா போல் இல்லை. வெற்றி விழா போல் இருக்கிறது என சிலாகித்தார். அதேநேரம், கவனமாக அரசியல் குறித்த கருத்துகளைப் பேசாமல் அவர் தவிர்த்து விட்டார்.

kaala

படத்தின் ரிலீஸுக்கான வேலைகளைத் தயாரிப்பு நிறுவனம் செய்து வரும் நிலையில், காலா பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போக இருப்பதாக ஒரு தகவல் சோஷியல் மீடியாவில் பரவியது. படத்துக்கான விளம்பர வேலைகளை தயாரிப்பு நிறுவமான வொண்டர்பார் பிலிம்ஸ் இதுவரை தொடங்காததால், காலா ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகலாம் என்று கூறப்பட்டது. இதனால், ரஜினி ரசிகர்கள் முதல் விநியோகஸ்தர்கள் வரை குழப்பமடைந்தனர். ஆனால், இந்த தகவலைப் படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ், காலா படம் திட்டமிட்டபடி ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.