Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷ் கணக்கை பொய்யாக்கிய கர்நாடகா… காலாவிற்கு வந்த சோதனை
காலாவை கர்நாடகாவில் வெளியிட தடை விதித்திருக்கும் நிலையில் தயாரிப்பாளர் தனுஷ் என்ன முடிவு எடுக்க போகிறார் என சலசலப்பு நிலவுகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் காலா. இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கி இருக்கிறார். தனுஷ் தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். படத்தில் ஹீமா குரோஷி, நானா பட்டேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரஜினி அரசியல் அறிவிப்புக்கு பிறகு வெளிவரும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்காக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி, வர இருக்கும் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு படத்தை வெளியிட இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
முன்னதாக, ஏப்ரல் மாத இறுதியில் படத்தை வெளியிட தனுஷ் முடிவு செய்து இருந்தார். தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்க போராட்டத்தை அடுத்த பட வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிவித்தார். ஆனால், அந்த நேரம் தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் காவிரி பிரச்சனை பெரிதாக பேசப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்து இருந்தனர். தமிழகத்தில் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்திருந்த ரஜினியும் கர்நாடகாவை எதிர்த்து குரல் கொடுத்திருந்தார். இது காலா படத்தின் வசூலை கண்டிப்பாக பாதிக்கும் என உணர்ந்த தனுஷ் படத்தின் ரிலீஸை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தார். மே மாதம் கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிந்து புது ஆட்சி உருவாகி விடும். பல கட்ட மாற்றத்திற்கு பிறகு படத்தை வெளியிட்டால் பட லாபத்தில் எதுவும் பிரச்சனை ஏற்படாது என்பதே தனுஷின் எண்ணமாக இருந்தது.
ஆனால், கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் தெரிவித்து இருந்தார். அவர் எப்போதுமே இப்படி தான் என அசால்டாக இருந்த படக்குழுவிற்கு, காலா படத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என சலசலப்பு நிலவியதால், படத்தை வெளியிட தடை விதித்து கர்நாடகா வர்த்தக சபை அதிர்ச்சி கொடுத்தது. இது குறித்து காலா பட தயாரிப்பாளர் தனுஷ் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி தற்போது நிலவி வருகிறது.
