முன்னணி மலையாள நடிகரான மம்மூட்டி மற்றும் அவரது மகனும், நடிகருமான துல்கர் சல்மான் ஆகிய இருவரில் ‘யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள்?” என தொலைக்காட்சி பேட்டியில் தன்னிடம் கேட்டதற்கு நடிகை அன்னா ராஜன் அளித்த பதில், சமூகவலைத்தளத்தில் மம்மூட்டி ரசிகர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இளம் நடிகையான அன்னா ரேஷ்மா ராஜனிடம், “நீங்கள் மம்மூட்டி அல்லது துல்கர் – யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அன்னா, “நான் துல்கருக்கு ஜோடியாக நடிப்பேன், மம்மூட்டி அவருக்கு அப்பாவாக நடிப்பார்” என பதில் கூறினார். மேலும் வேறொரு திரைப்படத்தில் நான் மம்மூட்டிக்கு ஜோடியாக நடிப்பேன் என்று தெரிவித்தார்.

இதனால், அன்னா மீது சமூக வலைத்தளங்களில் மம்மூட்டி ரசிகர்கள் தாக்குதல் நடத்தினர்.இதற்கு விளக்கமளிக்கும் விதமாக நடிகை அன்னா வெளியிட்ட ஃபேஸ்புக் நேரலையில் ‘நான் இருவருடனும் நடிக்கவேண்டும் என்பதற்காக அப்படி ஒரு பதிலை சொன்னேன்.

மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கவும் தயார்” என கூறியுள்ளார். மேலும், இந்த நேரலையில் அவர் கண்ணீர் மல்க உணர்ச்சிகரமாக பேசினார்.
தனது தொலைக்காட்சி பேட்டி குறித்து பிரபல செய்திதாள் நினைவுகூர்ந்த நடிகை அன்னா ராஜன் கூறுகையில், ”நான் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்த கருத்துகள் ஆன்லைன் ஊடகங்களால் திரித்து வெளியிடப்பட்டன.

அதனால் மம்மூட்டியின் ரசிகர்கள் கோபமடைந்து என் மீது சமூக வலைத்தளங்களில் தாக்குதல் நடத்தினர்” என்று கூறினார்.
”நான் துல்கருக்கு ஜோடியாக நடிப்பேன், மம்மூட்டி அவருக்கு தந்தையாக நடிப்பார்.

மற்றொரு திரைப்படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்க விருப்பம் என்று கூறினேன். இது தவறாக சித்தரிக்கப்பட்டது” என்று அன்னா ராஜன் குறிப்பிட்டார்.

ரசிகர்களுக்கு புரியவைக்க தான் ஃபேஸ்புக் நேரலையில் விளக்கமளித்ததாக தெரிவித்த நடிகை அன்னா, ”நேற்று என்னிடம் தொலைபேசியில் பேசிய மம்மூட்டி இது குறித்து அச்சப்படத் தேவையில்லை.

இருவரும் சேர்ந்து எதிர்காலத்தில் பணியாற்றலாம் என்று கூறினார்” என மேலும் தெரிவித்தார் அன்னா.பொதுவெளியில் இது குறித்து மம்மூட்டி கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறித்து தான் கவலைப்படவில்லை என்று கூறிய அன்னா, ரசிகர்கள் நடத்திய தனி மனித தாக்குதல்கள் குறித்துதான் ஆரம்பத்தில் காயமடைந்ததாகவும், பின்னர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டார்.

நடிகை அன்னா மீது மம்மூட்டி ரசிகர்கள் தொடுத்த ஆன்லைன் தாக்குதல்கள் மற்றும் இது குறித்து மம்மூட்டி பொதுவெளியில் கருத்து கூறாதது பற்றி அறிய அவரை தொடர்பு கொண்ட போது, அவரது தனி செயலர் ஜார்ஜ் இது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.