மும்பையில் தனது தாயை கத்தியால் குத்திக் கொன்று, அவரது ரத்தத்தில் ”ஸ்மைலி ஃபேஸ்” வரைந்து, 2 லட்சம் ரூபாயுடன் தப்பிச் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகனை போலீசார் தேடி வருகின்றனர். மும்பையில் சாந்தாகுரூஸ் என்ற இடத்தில் பிரபாத் காலனி, ஏஜி பார்க் பகுதியைச் சேர்ந்தவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியனேஸ்வர் கனோர்.

இவர் கர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ஷீனா போரா கொலை வழக்கை விசாரித்து வந்தவர். இவர் கடந்த செவ்வாய் கிழமை தொடர்ந்து தனது வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவரது மனைவி தீபாலி மற்றும் அவரது 22 வயது மகன் சித்தாந்த் கனோரிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை.

இதையடுத்து வீட்டுக்கு வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீடு பூட்டி இருந்தது. வீட்டுக்கு வெளியே சுமார் மூன்று மணி நேரம் அமர்ந்து இருந்தார். பின்னர், சந்தேகம் வர வெளியே இருந்த ஷூ ரேக்கை பார்த்தபோது அங்கு வீட்டின் சாவி இருந்தது தெரிய வந்தது. வீட்டை திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி. படுக்கை அறையில் மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

உடனே மும்பை அவசர போலீஸ் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூற, வகோலா போலீசார் விரைந்து வந்தனர். இவரது மனைவியை அவரது மகன்தான் கொன்றார் என்பதை அருகில் ரத்தத்தால் எழுதி வைத்திருந்த வாசகங்கள் காட்டின. அவரது மகனும் வீட்டில் இல்லை.

தாயைக் கொன்று அவரது ரத்தத்தில், ”அவளால் நான் சோர்ந்து விட்டேன். என்னை கைது செய்து தூக்கில் போடுங்கள்” என்று சித்தாந்த் எழுதி வைத்து, ஸ்மைலி ஃ பேஸ் வரைந்து விட்டு, வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 2 லட்சம் ரூயாயை தூக்கி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த சம்பவம் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தியானேஸ்வரிடம் விசாரணை மேற்கொண்டு சித்தாந்த்தை தேடி வருகின்றனர்.