வெள்ளிக்கிழமை, நவம்பர் 8, 2024

ரத்தன் டாடா இறப்பிற்குப் பின் வந்த அறிவிப்பு.. இத்தனை லட்சம் பேருக்கு வேலையா?

டாடா குழுமத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் மட்டும் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

ரத்தன் டாடாவின் மறைவுக்குப் பின் புதிய தலைவர்

டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா. இந்தியாவின் பிரபல தொழில்பதிபாரகவும் நன்கொடையாளராகவும் அறியப்பட்ட அவர், சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி அவர் தனது 86வயதில் வயது முதிர்வு காரணமாக உடல் நிலை பிரச்சனையால் காலமானார். அதன்பின்னர், டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா பதவியேற்றுள்ளார்.

நோயல் டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வரும் நிலையில் தற்போது நோயல் டாடா ரூ.34 லட்சம் கோடி மதிப்புள்ள டாடா குழுமத்தை வழி நடத்துவார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவின் பாரம்பரியமான டாடா குழுமத்தின் ஒவ்வொரு தயாரிப்பும் மக்களிடம் நம்பகத்தன்மை மற்றும் ஒரு பிணைப்பை உள்ளடக்கிய உணர்வாகவே பார்க்கப்படுகிறது.

5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

எனவே டாடா குழுமங்களில் வேலைக்கு விண்ணப்பித்து, அதில் வேலை வாய்ப்பை பெறுவது என்பதும் இளைஞர்களின் கனவாகவே உள்ளது. இந்த நிலையில் டாடா குழுமத்தில் அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ரத்தன் டாடாவின் மறைவிற்குப் பின் இந்த அறிவிப்பு இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து என்.சந்திரசேகரன் கூறியுள்ளதாவது:

டெல்லியில் இந்திய தர மேலாண்மை அறக்கட்டளை சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் டாடா சன்ஸ் குழும தலைவர் என்.சந்திரசேகரன், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஸ்னவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய சந்திரசேகரன்: டாடா குழுமம் இப்போது மின்சார வாகனங்கள், பேட்டரிகள் உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்துள்ள நிலையில், அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகளை டாடா குழுமம் உருவாக்கும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும்,இந்தியாவின் தயாரிப்புகளில் அதன் உற்பத்தி, மக்களின் தரம், சுற்றுச்சூழல் அமைப்பு, செயல்முறை தரம் ஆகியவற்றை உருவாக்க வேண்டியது அவசியம்; டாடா குழுமத்தில் ஒவ்வொரு மாதமும், 10 லட்சத்திற்கும் அதிகமான பேர் வேலைக்கு வருவதாகவும், விரையில் இந்த எண்ணிக்கையை 100 மில்லியன் பேராக உருவாக்க இருப்பதாகவும், அதன் மூலம் இளைஞர்களை உள்ளடக்கிய இந்தியா உலகின் மனித வள மூலதன ஆற்றலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்தியாவில் முக்கிய தொழில் நிறுவனமாகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் கருதப்படும் டாடா நிறுவனத்தின் இந்த வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. உலகின் அதிக இளைஞர்களைக் கொண்டிருக்கும் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தற்போது முதலீடு செய்து வேலைவாய்ப்பு அளித்து வரும் அதே சூழலில், ஏற்கனவே உள்ள நிறுவனங்களும் முதலீட்டை அதிகரித்து, வேலைவாய்ப்பையும் அதிகரிக்க வேண்டும் என்பது இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -spot_img

Trending News