நாசர் நல்ல மனிதர், ஆனால் விஷால் என்ற தப்பான ஆளை உடன் வைத்திருக்கிறார் என்று கலைப்புலி எஸ்.தாணு பேசினார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வருகிற ஏப்.,2-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. நடிகர் சங்கத்தை கைப்பற்றியது போன்று தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றியே தீர வேண்டும் என விஷால் தலைமையில் ஒரு அணி களமிறங்கி, ஊர், ஊராக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுல்ல, தற்போது பொறுப்பில் உள்ள தாணு தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக கட்டபஞ்சாயத்து நடக்கிறது, சிறு தயாரிப்பாளர்களுக்கு உதவ மறுக்கின்றனர் என்று கூறி வருகின்றனர். ஏற்கனவே கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது என்ற சொன்னதற்காக விஷால் தயாரிப்பாளர் சங்க உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டு, பின்னர் கோர்ட் வரை சென்று மீண்டும் உறுப்பினராக சேர்த்து கொள்ளப்பட்டார்.

இந்நிலையில் இந்த தேர்தலில் விஷாலை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தாணுவின் ஆதரவில் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணி களமிறங்குகின்றனர். இதில் முன்னர் தனியாக போட்டியிட்ட சிவா அணியும் ஒன்றிணைந்துள்ளனர். ராதாகிருஷ்ணனுக்காக சிவா தலைவர் பொறுப்பை விட்டு கொடுத்துள்ளார். இரண்டு அணி, ஓராணியான அறிமுக கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாணு, நுனிப்புல்லை மேய்ந்த மாதிரி, அங்கொன்றும், இங்கொன்றுமாக ஏதேதோ செய்கிறார் விஷால். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த ரூ.7 கோடி வைப்பு தொகையில் ரூ.3 கோடி தான் கையிருப்பு உள்ளதாக கூறுகிறார். இதோ, பிப்., 2017 வரை வைப்புதொகை ரூ.7 கோடி இருப்பதற்கான ஆடிட்டர்களால் தெரிவிக்கப்பட்ட ஆதாரம். விஷயம் தெரிந்து பேச வேண்டும். சும்மா வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது. நாசர், நல்ல மனிதர். ஆனால் விஷால் போன்ற தப்பான ஆளை உடன் வைத்திருப்பது கஷ்டமாக இருக்கிறது. நான் என்னுடைய சொந்த பணத்தை போட்டு எவ்வளவோ படத்தை ரிலீஸ் செய்திருக்கிறேன். எஸ்எஸ்.வாசன், ஏவி.மெய்யப்ப செட்டியார், நாகிரெட்டி, சின்னப்ப தேவர் போன்றவர்கள் கட்டி காத்த சங்கம் இது, அந்த சங்கத்திற்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக தான் நாங்கள் அனைவரும் செயல்படுகிறோம். இன்னும் தேர்தலுக்கு 10 நாள் இருக்கிறது. கேயார் போன்றவர்களும் எங்கள் அணிக்கு வருவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.