Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த விஷால்… எதற்கு தெரியுமா?

தமிழக அரசு தரமான தமிழ் திரைப்படத்துக்கு மானியம் தர புதிய உத்தரவை பிறப்பித்து இருப்பதற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நன்றி தெரிவித்து இருக்கிறார். தமிழ் சினிமா வளர்ச்சிக்கு புதிய முயற்சிகளை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கமும், நாசர் தலைமையிலான நடிகர் சங்கம் கையில் எடுத்து இருக்கிறது. துறை வளர்ச்சிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் கையாளப்பட்டு வருகிறது. கடந்த 50 வருட சினிமா வரலாற்றில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
சிறிய பட்ஜெட்களுக்கும் சரியான வசூல் வரவேண்டும் என்பதால் வெளியீட்டு தேதி வரை தற்போது தயாரிப்பாளர் குழுவே முடிவு செய்கிறது. இத்துறைக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி இணையத்தளத்துக்கு மூடு விழா காணும் முயற்சிகளும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி தரமான படங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் முதல்படியாக குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட 10 தரமான தமிழ் திரைப்படங்களுக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை அப்பட தயாரிப்பாளர்களிடம் நேற்று வழங்கினார். இது கோலிவுட் திரையுலகினருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து, விஷால் தனது நன்றியை ட்விட்டர் மூலம் தெரிவித்து இருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிறுபட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு 2007 முதல் 2014 வரை வெளியான குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட சமூக கருத்துள்ள திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு 20.06.2018 சென்னை தலைமை செயலகத்தில் ரூ.7 – லட்சம் மானியம் வழங்கி அவர்களை கௌவித்த மாண்புமிகு.
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், துணை முதல் அமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும் செய்தித்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
