Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல செய்யலாம் நீங்க செய்யலாமா பாஸ்… ஜெய்யை கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஜருகண்டி படத்தின் ப்ரோமோஷனுக்கு நடிகர் ஜெய் வராமல் இருப்பதற்கு புது காரணத்தை அவர் நண்பரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்த பிறகு அப்படத்தை மக்களுக்கு எடுத்து செல்வதில் பெரிய பங்கு ப்ரோமோஷனுக்கு தான் இருக்கிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்ற நடிகர் மற்றும் நடிகைகள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசுவதால், அப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகும். இதனால், பல முன்னணி நடிகர்கள் ஒரு படத்திற்கு அதிக ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் எளிதாகவே செய்து வருகிறார்கள். ஆனால், அஜித் என்றுமே அதை செய்யமாட்டார். காரணம் என் வேலை நடிப்பது மட்டும் தான். புகழ் வெளிச்சம் தேவை இல்லை என்று ஒதுங்கியே இருப்பவர். அவருக்கு இருக்கும் ரசிகர்களே அஜித்தை பற்றி புரிந்து வைத்து இருப்பதால் பெரிதாக எடுத்து கொள்வது இல்லை.
ஆனால், தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருப்பவர் ஜெய். சொற்ப படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஜெய் தனது படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகி வரும் ஜருகண்டி படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது. ஆனால் அந்நிகழ்ச்சியை ஜெய் தவிர்த்து விட்டார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் நிதின் சத்யாவிடம், நிகழ்ச்சியில் நடிகர் ஜெய் கலந்துகொள்ளாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. நடிகர் ஜெய் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுவார். அவரின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்த பிறகு தான் அவ்விடத்தை விட்டு கிளம்புவார்.
படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும், கொள்ளாததும் அவரது விருப்பம். ஜெய் எனது நண்பர் தான். அவருக்கு எதுவும் பிரச்சனை இருக்கலாம். அதனால் கூட பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்க்கலாம் என நினைக்கிறேன். அது எனக்கு தெரியாது. எனினும், தற்போது ஜெய் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குள் நான்கு படங்களில் நடித்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
அஜித் பாலிசியை பின்பற்ற ஜெய் நினைத்தால், அதற்கான சரியான நேரம் இதுவல்ல என கிசுகிசுக்கிறது நெட்டிசன் தரப்பு.
