ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து கடந்த 2014ம் ஆண்டு வெளியான படம் ‘கத்தி’. முழுக்க முழுக்க விவசாயிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.

இதனையடுத்து, கத்தி ரீமேக்கில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நடித்து ‘கைதி நம்பர் 150’ படம் ஜனவரி 11ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், வில்லனாக தருண் அரோராவும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க, ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடிகை ராய் லக்‌ஷ்மி, சிரஞ்சீவியுடன் நடனமாடியுள்ளார்.

இந்நிலையில், ‘கைதி நம்பர் 150’ படத்தின் ப்ரீரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சிரஞ்சீவி, என்னுடைய ரீ-என்ட்ரி படத்துக்காக நிறைய கதைகள் கேட்டேன். இதில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கத்தி’ படமே என்னை கவர்ந்தது. இப்படம் பார்த்த பிறகு, இதுதான் தனக்கு சரியான ரீ-என்ட்ரி படம் என்று முடிவு செய்தேன் என்றார். ‘கத்தி’ பொழுதுபோக்கு, காமெடி, என அனைத்தும் கலந்த கலவையுடன், முக்கிய சமூக நலனை தெரிவிக்கும் படமாகவும் இருப்பதால், இப்படமே தனக்கு 150வது படமாக அமைய வேண்டும் என முடிவு செய்தேன் என்றார்.

இதுகுறித்து, ‘கத்தி’ ரீமேக்கில் நான் நடிக்கிறேன் என்று கேட்ட போது, தெலுங்கு ரைட்சை தானே பெற்று தருவதாக கூறிய நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.