கொல்கத்தா: காதலியின் ஆபாச படங்களை நெட்டில் பதிவேற்றிய கொடூரனை, காவல்துறையினர் வளைத்து பிடித்து கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அடுத்த முச்சிபாரா பகுதியைச் சேர்ந்தவர் சந்திப் குமார் தத்தா. அவர் சால்ட் லேக்கில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவர் தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையில் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். அதனால் கோபமடைந்த தத்தா, முன்னாள் காதலியை பழிவாங்க முடிவு செய்துள்ளார். அவரது பெயரில் இரண்டு போலி பேஸ்புக் கணக்குகளை தொடங்கியுள்ளார். பின்னர் முன்னாள் காதலியின் ஆபாச படங்களை அதில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பெண், காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். அதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் உதவியுடன், தத்தாவை அவரது இல்லத்தில் காவல்துறை சுற்றி வளைத்தது. அவரிடம் இருந்து மொபைல் போன், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். தத்தா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.