2-ஆம் வகுப்பு சிறுவனை பள்ளி ஆசிரியர்களே நரபலி கொடுத்த கொடூரம்.. எங்க நடந்திருக்கு தெரியுமா?

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் டிஎல் பப்ளிக் என்ற குடியிருப்பு பள்ளி இயங்கி வருகிறது. டெல்லியில் மென்பொருள் பொறியாளராக பணி புரியும் ஸ்ரீ கிருஷ்ணாவின் மகனான கிருதார்த் இந்த பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை, இரண்டாவது மாடியில் அமைந்துள்ள விடுதியில் இருந்து அனைத்து குழந்தைகளையும் யோகா ஆசிரியர் அழைத்துள்ளார். கிருதார்த் வராததால் அவனது அறைக்கு சென்று பார்த்த போது படுக்கையில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து மாணவனின் பெற்றோருக்கு உடல் நிலை சரியில்லை என பள்ளியில் இருந்த ஒருவர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி இயக்குனர் தினேஷ் பாகேலிடம் தகவல் தெரிவித்த போது, அவர் இந்த சம்பவத்தை மறைக்க முயன்று மாணவனின் சடலத்தை தனது காரில் ஏற்றி அந்த பகுதியில் சுற்றியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

உடனடியாக விரைந்து வந்த மாணவனின் உறவினர்கள் அந்த காரில் சிறுவன் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆத்திரமடைந்த உறவினர்கள் காரை அடித்து நொறுக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை பள்ளி இயக்குநர் தினேஷ் பாகலை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பள்ளியின் புகழ் மற்றும் வெற்றிக்காக சிறுவனை நரபலி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் முதலாவதாக வேறொரு சிறுவனை நரபலி கொடுக்க முயற்சி செய்துள்ளனர். அந்த சிறுவன் கத்தி கூச்சலிட பிரச்சனை ஆகிவிடும் என்று பயந்து, அந்த சிறுவனை விட்டுவிட்டனர். இதை தொடர்ந்து, இந்த சிறுவனை, பள்ளி ஆசிரியரே கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.

இது தொடர்பாக மேலும் 3 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி இயக்குநரின் தந்தை ஆகியோரை கைது செய்துள்ளனர். மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டிய பள்ளியிலே இந்த கொடுமை அரங்கேறியது, பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -spot_img

Trending News