இந்தி நடிகர் அமிதாப்பச்சன் காசநோய் பிரசார தூதராக செயல்பட்டு வருகிறார். அவரது மகத்தான சேவையை கவுரவிக்கும் பொருட்டு, அவருக்கு விருது வழங்க இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் முடிவு செய்தது.

அதன்படி, மும்பையில் நடைபெற்ற விழாவில் அமெரிக்க தூதர் ரிச்சர்டு ஆர்.வெர்மா, 74 வயது நடிகர் அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க அரசின் விருதினை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் திரையுலக பிரமுகர்களும், இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்த நடிகர் அமிதாப்பச்சன், அதில் அமெரிக்க தூதர் ரிச்சர்டு ஆர்.வெர்மா உடன் தனக்கு ஏற்பட்ட நட்பை நினைவுகூர்ந்தார். இதுகுறித்து அமிதாப்பச்சன் பேசியதாவது:-

நான் 2015-ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்ற ஒரு வாரத்துக்குள், அமெரிக்க தூதரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், இந்தியாவில் காசநோய் விழிப்புணர்வுக்காக ஏதாவது செய்ய விரும்புகிறோம். இந்த பணியில் நீங்கள் ஈடுபடவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தனர். உடனடியாக அதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.

இந்தியாவில் காசநோய் பாதிப்பு அதிகம் இருப்பது என்னை தர்மச்சங்கடத்தில் ஆழ்த்துகிறது. 2002-ம் ஆண்டில் எனது முதுகெலும்பில் காசநோய் பாதிப்பு இருந்தது பொது பரிசோதனையில் தெரியவந்தது.

இதனால், ஒவ்வொரு நாளும் 8-9 வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொண்டு உயிர்வாழ்ந்தேன். வெட்கத்தை விட்டு சொல்வது என்றால், எனக்கே காசநோய் வருகிறது என்றால், மற்றவர்களுக்கும் எளிதில் வரலாம். சரியான நேரத்தில் அது கண்டறியப்பட்டால், காசநோயை குணப்படுத்தி விடலாம்.