தங்கலான், கொட்டுக்காளிய விட அதில என்ன இருக்கு? ஆஸ்கருக்கு செல்லும் ‘லாபதா லேடீஸ்’-க்கு கதைக்கு குவியும் எதிர்ப்பு!


உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்களின் பெருவிருப்பமாக இருப்பது ஆஸ்கர் விருது. ஆஸ்கர் விருதை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது பெறவேண்டும் என்று ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல சினிமா கலைஞர்கள் தங்கள் திறமையை சினிமாவில் முதலீடு செய்து வருகின்றனர்.

ஸ்லம்டாக் மில்லியனார் என்ற படத்தின் இசையமைப்பு மற்றும் பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2009 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்றார். இதையடுத்து, இந்தியாவுக்கான ஆஸ்கர் விருது கதவுகளை ஏ.ஆர்.ரஹ்மான் திறந்து வைத்துள்ளார் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான படங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, ரிலீஸாகும் நிலையில், இதில் சின்ன பட்ஜெட்டோ, பெரிய பட்ஜெட்டோ, டாகுமென்ட்ரி படமோ எதுவாக இருந்தாலும் அது தரமாக இருந்தால் நிச்சயம் ஆஸ்கர் வெல்லும் என்பதற்கு உதாரணம் கார்த்திகி கோன்சால்வசு இயக்கத்தில் கடந்த 2022 ஆண்டு நெட்பிளிக்ஸில் வெளியான தி எலிபெண்ட் விஸ்பர்ஸ். இதையடுத்து ராஜமெளலி இயக்கத்தில், கீரவாணி இசையில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளருக்கு ஆஸ்கர் விருது கிடைத்து.

இந்த நிலையில், ஆண்டுதோறும் இந்திய சினிமா கூட்டமைப்பு சார்பில், பல மாநிலங்களில் இருந்து சிறந்த படங்களைத் தேர்வு செய்து, சிறந்த வெளிநாட்டு சினிமா பிரிவில் போட்டியிட பரிந்துரைக்கும். அதன்படி, அடுத்த வருடம் 97 வது ஆஸ்கர் விருது போட்டிக்கு, இந்தியா சார்பில், லாபதா லேடீஸ் என்ற ஹிந்திப்படம் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதேபோல், தமிழில் வெளியான மகாராஜா, ஜமா, கொட்டுக்காளி, வாழை, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தங்கலான் உள்ளிட்ட படங்களும் பரிந்துரை செய்யப்பட்டன. அத்துடன், அனிமல், கல்கி 2898 ஏடி உள்ளிட்ட 29 படங்கள் பரிந்துரைக் கப்பட்டுள்ளன.

இதில் இருந்து ஒரு படம் தேர்வு செய்யப்பட்டு,ஆஸ்கரின் சிறந்த வெளிநாட்டு படங்களின் பிரிவில் போட்டியிட அனுப்பப்படும். இந்த நிலையில் அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் தயாரித்துள்ள லாபதா லேடீஸ் என்ற ஹிந்திப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப இந்திய திரைப்பட கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்புகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து அரசியல் பிரமுகர்கள், சினிமாத்துறையினர் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துகளைக் கூறி வருகின்றனர். அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், லாபதா லேடீஸ் காமெடியுடன் பல கருத்துகளைக் கூறினாலும், இந்திப் படம் என்ற காரணத்திற்காக தேர்வு செய்துள்ளதை ஏற்க முடியாது. இது உணர்வுப்பூர்வமாக இல்லை என்று தெரிவித்துள்ளார். வெயில், அங்காடித்தெரு, அரவான் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் வசந்த பாலன், லாபதா லேடீஸ் ஒரு பீல் குட் டிராமா. இப்படத்தைக் காட்டிலும், கொட்டுக்காளி, உள்ளொழுக்கு, ஆடுஜீவிதம் ஆகிய படங்களில் ஒன்றை ஆஸ்கருக்கு அனுப்பியிருக்கலாம்என்று கூறியுள்ளார்.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் கதை: ”சட்டீஸ்கர் மாநிலத்தில் ஒரு கற்பனையை கதையை உள்ளடக்கியதாக உள்ளது. அதில், தீபக்குமார் என்ற நபர் ஃபூல் குமாரி என்பவரை திருமணம் செய்கிறார். தன் மனைவியை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும்போது ரயிலில் மற்றோரு ஜோடியும் உள்ளது. புதிதாக திருமணமான இரு பெண்களும் முகத்தை மூடி பயணிக்கிறார்கள். ரயில் ஊரை வந்தடைந்தபோது, தன் மனைவிக்குப் பதிலாக வேறு மணப்பெண்ணுடன் இறங்குகிறார் தீபக். வீட்டிற்கு சென்றபோது தன் மனைவிக்குப் பதிலாக வேறொருவரை அழைத்து வந்து தெரிந்து அதிர்ச்சியடைகிறார். அப்பெண், தீபக் வீட்டாருடன் நெருக்கமாகும் நிலையில், உண்மையான மணப்பெண் ஃபூல் குமாரி தன் கணவரை தேடிக் கொண்டிருக்கிறார் ரயில் நிலையத்தில்.

புதிதாக திருமணமான இரு பெண்கள் முகம் மூடியதால் வந்த குழப்பத்தால் புதிய சூழல்களை சந்திக்க நேரிடுகிறது. கடைசியில் அவர்களுக்கு என்ன நடந்துஎன்பதுதான் கதையாக உள்ளது. ஆணாதிக்கம் உள்ள சூழலில் பெண்களின் வாழ்கை இப்படம் பிரதிபலிப்பதாக உள்ளது. தென்னிந்திய பிரபலங்கள் இப்படம் ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்ட தை எதிர்த்தாலும், இந்தி சினிமா பிரியர்களை இதைக் கொண்டாடி வருகின்றனர். நிச்சயம் ஆஸ்கர் கிடைக்கும் என்று அறுதியிட்டு கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News