சென்னை கிண்டியில் செய்தியாளர்களை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், தமிழக திரையரங்கு உரிமையாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக சந்தித்து கூறியதாவது இணையதளங்களில் சட்ட விரோதமாக பலர் படம் பார்த்து வருகின்றனர்.

இதை மத்திய மாநில அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக  மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடுவை சந்தித்து மனு அளித்துள்ளோம். சமீபகாலமாக லோக்கல் கேபிள் டிவிகளில் புதிய படம் மற்றும் படம் சார்ந்த நிகழ்ச்சிகளை சட்ட விரோதமாக சிலர் ஒளிபரப்பி வருகின்றனர்.

திருட்டி வி.சி.டியால் தயாரிப்பாளர்களுக்கு வருமானம் குறைந்து, சின்ன பட தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டுமெனவும், இது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் மறுபடியும் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். சின்ன படங்களை வெளியிட தமிழகம் முழுவதும் அரசு புதிய திரையரங்குகளை உடனடியாக திறக்க வேண்டும்.

திருட்டு விசிடிகளில் படம் வருவதை மாநில அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். இது தொடர்பான நடவடிக்கை எடுக்க நாங்கள் மத்திய மாநில அரசுக்கு  30 நாட்கள் காலக்கெடு அளிக்க உள்ளோம். இணையதளத்தில் 11 லட்சம் பேர் புதிய படங்களை டவுன்லோடு செய்கின்றனர்.

மாநில மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் வருகிற மே 30ம் தேதி காலை 8.30 முதல் தொடர் வேலைநிறுத்தம் போராட்டம் மற்றும் திரையரங்குகளில் படக்காட்சி ரத்து, இனி எந்த புதிய படமும்  வெளியே வராது. தமிழகம் முழுவதும் எந்த படப்பிடிப்பும் நடக்காது என, தயாரிப்பாளர் சங்கமும் திரையரங்கு உரிமையாளர் சங்கம் முடிவு எடுத்துள்ளதாக நடிகர் விஷால்  தெரிவித்தார்.