உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகம் முழுவதும் 3000 ஆயிரம் மதுக் கடைகள் மூடப்பட்ட நிலையில், சில சட்ட திருத்தங்களை செய்து 1500 புதிய மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 6,672 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வந்தன. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என அறிவித்திருந்தார்.

இதன்படி , 2 கட்டங்களாக 1,000 மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. இதையடுத்து  5,672 மதுக்கடைகள் மட்டுமே  தமிழகத்தில் இயங்கி வந்தன.

இந்நிலையில்தான் உச்சநீதிமன்றம் மதுக் கடைகளுக்கு ஆப்பு வைத்தது.  நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்திற்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் மூடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து  தமிழகத்தில் உள்ள  3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன. அவற்றை வேறு இடங்களில் திறப்பதற்கு அரசு முயற்சி செய்தபோது பொது மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் அதனது உத்தரவில் சில திருத்தங்கனை செய்ததையடுத்து 300 கடைகள் மூடப்படாமல் தப்பித்தன.

இந்தநிலையில், அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகளையும், சுப்ரீம் கோர்ட்டு வகுத்துள்ள எல்லையைத் தாண்டி திறக்கும் முனைப்பில் தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

3 ஆயிரம் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், விற்பனை 21 சதவீதம் குறைந்துள்ளது. இந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குள் இருக்கும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை, மாநகராட்சி சாலைகள் என்றும், நகராட்சி சாலைகள் என்றும் மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அறிவிக்கும்  போது, அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் மதுக்கடைகளில், 1,500 மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது.  இந்த செய்தி குடி மகன்களுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் இதற்கு இப்போதே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.