தமிழக விவசாயிகள் கடந்த 41 நாட்களாக டெல்லியில் மேற்கொண்டுவந்த அறவழிப் போராட்டத்தை, தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; நதிகளை ஒன்றிணைக்க வேண்டும்; வறட்சி பாதித்துள்ள விவசாயிகளின் வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த மார்ச் 14ம் தேதி போராட்டம் தொடங்கியது.

டெல்லி ஜந்தர்மந்தரில் முகாமிட்ட விவசாயிகள், அமைதியான வழியில் தங்களது கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டத்தை, கடந்த 41 நாட்களாக நடத்திவந்தனர்.

பிச்சை எடுப்பது, எலிக்கறி தின்பது, மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுப்பது, பைத்தியம் போல தெருக்களில் ஓடுவது, தாலி அறுப்பது, மொட்டையடிப்பது, மீசை, தாடி மழிப்பது, ஒப்பாரி வைப்பது, பாடை ஊர்வலம் நடத்துவது எனப் பலவிதங்களில் அதேசமயம், அறவழியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.


தமிழக விவசாயிகளின் போராட்டத்தில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்றனர். அத்துடன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய அரசியல் தலைவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின், வைகோ, தம்பிதுரை உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, கோரிக்கைகளை நிறைவேற்ற, மத்திய அரசை வலியுறுத்தினர்.

ஆனால், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் நேரில் வந்து சந்திக்கும் வரை, போராட்டம் தொடரும் என்று, விவசாயிகள் கூறிவந்தனர். இந்நிலையில், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகளை நேரில் சந்தித்துப் பேசினார்.

41வது நாளான இன்றுதான் தமிழக முதல்வர் பழனிச்சாமி நேரில் வந்து பேசியது இங்கே கவனிக்கத்தக்கது. விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றும்படி, அவர் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். மேலும், போராட்டத்தை கைவிடும்படி போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணுவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தினார்.

எனினும், போராட்டத்தை நிறுத்த மறுத்துவிட்ட அவர், பிரதமர் மோடி எங்களது கோரிக்கை ஏற்கும்வரை போராட்டம் தொடரும் என்றார். இதையடுத்து, பிரதமரை சந்திக்க நடவடிக்கை எடுப்பேன் என, முதல்வர் பழனிச்சாமி உறுதி அளித்தார்.

இதன்பேரில், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் தற்போது அறிவித்துள்ளனர். மே 25ம் தேதி வரை போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், கோரிக்கை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாவிட்டால், மீண்டும் போராடுவோம் என்றும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தலைநகர் டெல்லியில் இவ்வளவு நாட்களாகப் போராடிய விவசாயிகளை இறுதிவரையும் பிரதமர் மோடி அல்லது மூத்த அமைச்சர்கள் யாருமே நேரில்வந்து சந்திக்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே மரியாதை நிமித்தமாக விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.