வங்கி கடன் ரத்து, வறட்சி நிவாரணம் உள்பட பல்வேறு கேரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 38வது நாளாக தொடர்கிறது.

இந்த நிலையில் வங்கி அதிகாரிகள் கடனை உடனே கேட்க மாட்டார்கள் என்பதற்கு நீதிபதி கையெழுத்திட்ட கடிதம் கொடுத்தால் போராட்டத்தை வாபஸ் பெற விவசாயிகள் திட்டமிட்டு இருந்தனர். இதற்காக போராட்டத்தை தலைமையேற்று நடத்திய தேசிய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு நேற்று கருத்து கேட்டு வந்தார்.

இதற்கு பாதிபேர் ஆதரவு தெரிவித்தனர். பாதி பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் நீதிபதி அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருப்பதால் கடிதம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், போராட்டம் நடத்தும் விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் கூடாரம் தங்கி உள்ளனர். அந்த கூடாரங்களை போலீசார் இன்று மதியம் அகற்ற தொடங்கினர். மேலும் உடைமைகளை எடுத்து கொண்டு செல்லுங்கள் என்று உத்தரவிட்டனர்.

ஆனால் விவசாயிகள் செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனை தொடர்ந்து டெல்லி ஜந்தர்மந்தரில் மத்திய ரிசர்வ் படை குவிக்கப்பட்டுள்ளனர்.