தமிழக முதல்வர் மீண்டும் மாற்றப்படுவார் என்றும், டி.டி.வி.தினகரன் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என்றும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் தற்போதைய முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்துறை, பொது பணித்துறை, நிதித்துறை, காவல்துறை உள்ளிட்ட நான்கு பெரிய துறைகள் ஒதுக்க காரணம் என்ன என்பது குறித்த தகவலும் தற்போது தெரியவந்துள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணித்துறையை கவனித்து வந்தார். ஒ.பி.எஸ். நிதித்துறையை கவனித்து வந்தார். ஜெயலலிதா மரணம் அடைந்ததால் பன்னீர்செல்வத்திடம் கூடுதலாக உள்துறை இலாக்கா கொடுக்கப்பட்டது.

இதற்கு காரணம், சசிகலா முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பிறகு உள்துறையை பன்னீர் செல்வத்திடம் இருந்து பறிக்க திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் கண்ட கனவு தகர்ந்து, சசிகலா எதிர்பாராதவிதமாக சிறைக்கு சென்றுவிட்டதால் நிலைமை வேறு விதமாக சென்றுவிட்டது.

தற்போது எடப்பாடி பழனிச்சாமியிடம், ஜெயலலிதா, ஓ.பி.எஸ் ஆகிய இரண்டு பேரும் வகித்த துறைகளுடன், தான் ஏற்கனவே வகித்த துறையும் சேர்த்து நான்கு முக்கிய துறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றது, ஒரு தற்காலிக நடவடிக்கை தான் என்று கூறப்படுகிறது. மேலும், மே மாதம் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்பதால் சசிகலாவால் அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் அங்கு போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

தேர்தலில் எப்படியாவது அவரை வெற்றிபெற வைப்போம். அப்போது மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும். ஒருவேளை, அதற்கு முன்னதாகவே தினகரன் முதல்வர் பதவியை ஏற்பார் என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

பின்னர், பொதுப்பணித்துறையை எடப்பாடி கவனிப்பார் என்றும், நிதித்துறை வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோன்று ஜெயலலிதா பயன்படுத்திய அறையை, அதுவரை யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் தினகரன் முதல்வராக பதவியேற்ற பிறகு அந்த அறைக்கு வருவார் என்றும் அதிமுக நிர்வாகிகள் சிலர் உறுதிபட கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.