Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ் ராக்கர்ஸூக்கு பெப்பே காட்டிய விஷால்.. இது என்ன புது டெக்னிக்?
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் ஒரு காலத்தில் திருட்டி விசிடி, டிவிடி தயாரிப்பவர்களைக் கைது செய்வதில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்தனர். பெரும் பொருட்செலவில் தாங்கள் தயாரிக்கும் படங்களை 20 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கும் திருட்டு விசிடியில் விற்று கல்லாக் கட்டுபவர்களைக் கண்டுபிடுத்துத் தண்டிப்பது அவர்களுக்கு பெரும் பாடாகிப் போனது. ஒரு வகையில் சினிமா தயாரிப்பாளர்களுக்கு அவர்கள் சிம்ம சொப்பனமாய் விளங்கினர். இன்டர்நெட் பெரிதாக வளராத வரை இதுதான் அன்றாட நடவடிக்கையாக இருந்தது.
இணைய வளர்ச்சி ஒரு வகையில் பாசிடிவ்வாகப் பார்க்கப்பட்டாலும், அதற்கு நேரெதிரான கோர முகமும் அதற்கு உண்டு. சினிமாக்கள் வெளியாகி ஒரு சில மணி நேரங்களில் அந்த படம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும் டிஜிட்டல் உலகில் நாம் இன்று நிற்கிறோம். அந்த வகையில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், தங்கள் பரம வைரியாக நினைப்பது தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தைத்தான். இந்த இணையதளத்தை முடக்க தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளில் இறங்கியது. இருப்பினும் வெவ்வேறு டொமைன் பெயர்களில் அந்த சைட் லைவாகவே இருந்து வந்தது.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் பொறுப்பேற்றதும், தமிழ் ராக்கர்ஸுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கி விட்டார். அதேபோல், சட்ட விரோதமாக இணையத்தில் தமிழ் படங்களைப் பதிவேற்றியது தொடர்பாக ஒருவரை பொறி வைத்து போலீஸில் பிடித்துக் கொடுக்கவும் செய்தார். மேலும், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துக்கு விரைவில் மூடுவிழா நடத்தப்படும் என தில்லாக ஓபன் ஸ்டேட்மெண்டே கொடுத்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக விஷால் நடித்த படங்கள் திரைக்கு வந்த ஒரு சில மணி நேரங்களிலேயே எங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சில சட்டவிரோத தளங்களின் அட்மின்கள் சபதமேற்றதாகக் கூட ஒரு தகவல் வெளியானது.
இந்தநிலையில், விஷால் – அர்ஜூன் நடிப்பில் வெளியான இரும்புத் திரை படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இதனால், ஆர்வமான தமிழ் ராக்கர்ஸ் இணையதள அட்மின்கள் அந்த படத்தை இணையத்தில் பதிவேற்ற முயற்சி செய்தனர். ஆனால், பல முறை முயற்சி செய்தும் இரும்புத் திரை படத்தை அவர்களால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. வெவ்வேறு ஐபிக்களைப் பயன்படுத்தியும் இரும்புத் திரை படத்தை தமிழ் ராக்கர்ஸால் அப்லோட் செய்ய முடியவில்லை என்கிறார்கள். ஐ.டிக்களை மாற்றி மாற்றி அவர்கள் முயற்சி செய்தபோதும் அந்த காரியம் நடக்கவில்லை. தமிழ் ராக்கர்ஸ் உடனான போட்டியில் இதன்மூலம் விஷால் அடுத்த படிக்குச் சென்றுள்ளார் என்கிறார்கள் ஆன்லைன் கில்லாடிகள். எது எப்படியோ தமிழ் ராக்கர்ஸுக்கே விஷால் பெப்பே காட்டிவிட்டார்.
