Tamil Cinema News | சினிமா செய்திகள்
தப்பான நேரத்தில் ஷங்கரின் ட்வீட்டால் கடுப்பில் தமிழ் மக்கள்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 21-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நூறு நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தின் நூறாவது நாளான நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். மக்கள் கூட்டம் அதிகமானதால், போலீசார் அவர்களைக் கலைந்துபோகச் சொல்லினார். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்வரை எங்கள் போராட்டம் ஓயாது என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த மக்கள் அனுமதி கோரினர். ஆனால், போலீசார் 144 தடை உத்தரவைக் காரணம் காட்டி மக்கள் மீது வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்தனர்.
இதனால், போரட்டாக்களம் போர்க்களமானது. கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பு என பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு போராட்டக் காரர்கள் தீ வைத்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 9-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த மாணவியும் ஒருவர் என்பது சோகம். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று போராட்டங்கள் வெடித்துள்ளன. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் அரசு சார்பில் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதி அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கருணை அடிப்படையில் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அரசின் நிவாரணத்தை விட ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதே முக்கியம் எனக் கூறி போராட்டக்களம் சூடுபிடித்துள்ளது.
இதில், காயமடைந்தவர்களை வைகோ, கே.பாலகிருஷ்ணண் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இன்று, நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். அதேபோல், கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்குச் செல்ல இருந்ததை ரத்து செய்துவிட்டு ஸ்டாலினும் தூத்துக்குடி செல்கிறார்.
இந்தநிலையில், நேற்று தூத்துக்குடி போராட்டக்களம் பற்றியெரிந்துகொண்டிருந்த நேரத்தில் சென்னை-ஹைதராபாத் அணிகள் மோதிய ஐபிஎல் தகுதிச் சுற்றுப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் கண்டனம் தெரிவிக்காமல், சென்னை அணி வெற்றியை சில பிரபலங்கள் கொண்டாடியது நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்தது. குறிப்பாக சென்னை அணியின் வெற்றிக்குப் பின்னர் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு எதிராக நெட்டிசன்கள் பொங்கி எழுந்துவிட்டனர்.
சென்னையின் வெற்றிக்குப் பின்னர் டிவிட்டரில் கருத்துத் தெரிவித்த ஷங்கர், சி.எஸ்.கே படத்தை அவெஞ்சர்ஸ் படத்துடன் ஒப்பிட்டு முழுக்க முழுக்க ஹீரோக்கள் நிறைந்த டீம்.. என்ன ஒரு மேட்ச் என்று பதிவிட்டிருந்தார். இதனால், ஷங்கருக்கு எதிராகப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இதனால், அந்த ட்வீட் பதிவை டெலிட் செய்த ஷங்கர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குக் கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்தும் இப்போது பதிவிட்டுள்ளார்.
