தனது திருமணத்தில் சொந்தக்காரர்களாக நடிக்க பணம் கொடுத்து 200 பேரை அழைத்து வந்த சீன மணமகன் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

சில நாட்கள் முன்பு சீனாவின் ஷான்ஸி மாநிலத்தில் வாங் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் வாங்கின் சார்பில் உறவினர்கள் 200 பேர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கான சடங்குகள் நடைபெற்ற போது, திடீரென மணமகள் ஒரு சர்ச்சையை கிளப்பினார்
வாங்கின் உறவினர்களிடம் மணமகள் பேச்சு கொடுத்த போது, அவர்கள் உண்மையான உறவினர்கள் இல்லை என்பதும் பணம் கொடுத்து நடிக்க அழைத்து வரப்பட்ட நடிகர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

வாங்கின் உறவினர்களிடம் மணமகள் பேசியபோது, தாங்கள் அனைவரும் வாங்கின் நண்பர்கள் மட்டுமே என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த மணப்பெண், அவர்களை விவரமாக விசாரிக்கத் துவங்கிய போது, அவர்கள் அனைவரும் ஒரு நாளுக்கு 15 டாலர்கள் என்ற சம்பளத்தில் உறவினர்களாக நடிக்க அழைத்து வரப்பட்ட நடிகர்கள் என்பது தெரியவந்தது.

சீனாவில் செயல்படும் விசேட் என்ற சமூக வலைத்தளம் மூலமாக இவர்கள் அனைவரையும் தொடர்பு கொண்ட வாங், அவர்களை தனது திருமணத்தில் உறவினர்களாக நடிக்க அழைத்துள்ளார். நடிக்க வந்த 200 பேரில் பெரும்பாலானோர் கார் ஓட்டுநர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களாவர்.

மணமகள் குடும்பத்தினர் அளித்த புகாரையடுத்து, மணமகன் வாங் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் எதற்காக உறவினர்களாக நடிக்க ஆட்களை தயார் செய்தார் என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.