படம் வெளியானால் தியேடரின் ஸ்கிரீனை கிழிப்போம்.. மிரட்டலை மீறி தைரியமாக வெளியான 5 படங்கள்

ஒரு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெயர் வாங்குவதற்குள் ஒரு தாய் ஒரு குழந்தையை பெற்றெடுப்பதற்கு சமம் என்று சினிமா வட்டாரத்தில் எப்போதும் பேசிக் கொள்வார்கள். அவ்வளவு கடினமான காரியம் ஒரு நல்ல திரைப்படத்தை வெளியில் கொண்டுவருவது . அப்படி இருக்கையில் படம் வெளியாவதற்கு முன்பு அந்த படத்தின் தலைப்பில் சர்ச்சையை கிளப்பி ஏன்டா இந்த படத்தை எடுத்தோம் என படக்குழுவை போட்டு பாடாய்படுத்தி அதன்பின் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படங்கள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.

இரணியன்: இரணியன் திரைப்படம் இயக்குனர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். இப்படத்தில் நடிகர் முரளி மற்றும் நடிகை மீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். வாட்டாக்குடி இரணியன் வாழ்க்கையை படமாக எடுக்க நினைத்த இந்த படத்தின் இயக்குனர் அவரின் வரலாற்றை சரியாக பதியவில்லை என்று கூறி படம் வெளியான பிறகு சில அமைப்புகளால் எதிர்ப்புகள் கிளம்பியது. இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறி பின்னர் இந்த படம் நல்ல ஹிட் அடித்தது. படத்தில் கமெர்ஷியலுக்காக பல காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது.

விருமாண்டி: தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு திரைப்படம் விருமாண்டி. கடந்த 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து இருந்தார். படத்தின் தலைப்பை முதலில் சண்டியர் என்று தான் வைத்து இருந்தனர். அதனால் சமுதாய சீரழிவு ஏற்படுகிறது. சமூகம் கெட்டு விடும் இப்படி தலைப்போடு படங்கள் வந்தால் என்று படத்திற்கு எதிராக கொடி பிடிக்க ஆரம்பித்தனர். மிகப்பெரிய சர்ச்சையான கருத்துக்கள் இந்த படத்திற்கு எதிராக வீசப்பட்டது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு சென்ற நடிகர் கமல்ஹாசன் சினிமாவை விட்டே செல்வதாக கூட முடிவெடுக்க வைத்து விட்டனர். அதன் பின் வெளியான இந்த படம் பட்டி தொட்டி எங்கும் எட்டி பிடித்து, மிகப்பெரிய வெற்றி அடைந்து, இன்று வரை அந்த படம் பேசப்படும் ஒன்றாக உள்ளது.

பரியேறும் பெருமாள்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் பரியேறும் பெருமாள். படத்தின் தலைப்பு வெளியான உடனேயே லேசாக புகைய ஆரம்பித்தது. மேலும், இந்த படம் தழுவப்பட்ட நாவலில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்று இருப்பதால் இந்த படம் சாதிப்படம் என்றும் படம் சமூக அமைதியை குலைக்க வருகிறது என்றும் கூறப்பட்டது. அதனால் இந்த படம் வெளியாக கூடாது என்று பல முனைகளில் இருந்து எதிர்ப்புகள் வெளியானது. தடைகளை மீறி படம் வெளியாகி மிக பெரிய ஹிட் அடித்தது. அதுமட்டுமின்றி மாரி செல்வராஜ் எனும் ஒரு நல்ல இயக்குனர் தமிழ் சினிமாவின் வெளிச்சத்திற்குள் வந்தார்.

கர்ணன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து ஒரு புரட்சி படைப்பாக வெளியான படம் தான் கர்ணன். இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் என்பதால், இது சாதிப்படம் தான் என்று வெளியாகும் முன்பே முத்திரை குத்தினார்கள். இருந்தும் படம் வெளியானது. ஆனால் படத்தில் 1995 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியன் குளம் கிராமத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலை மையமாக வைத்து திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் தொடக்கத்திலேயே, இது உண்மை கதையை தழுவியது அல்ல என்று கூறப்பட்டு இருந்தது. அதனால் தான் படத்தில் 1997 ஆம் ஆண்டு நடந்தது போல காட்டப்பட்டு இருக்கும். ஜெயலலிதா ஆட்சியில் நடந்த சம்பவத்தை கருணாநிதி ஆட்சியில் நடந்தது போல தவறாக காட்டுகிறீர்கள் என்று படம் மீது எதிர்ப்பு அதிகரித்தது. இருந்தும் படம் வெளியாகி பல விருதுகளை அறுவடை செய்தது.

ஜெய் பீம்: இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி உலக அளவில் பேசப்பட்ட படம் தான் ஜெய் பீம். இந்த படத்தின் கதையில் ஒரு சமூகத்தினரை தவறாக சித்தரித்து அவர்களை தீயவர்களாக காட்டியதாக தமிழகம் முழுவதும் சர்ச்சையானது. பின்னர் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கபட்டு திரையிடப்பட்டது. அதேபோல ஜெய் பீம் திரைப்படதில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக வசனங்களும் இடம் பெற்றதாக சர்ச்சை எழுந்தது. இப்படி பல சர்ச்சைகளுக்கு மத்தியில் படம் வெளியாகி மிகபெரிய ஹிட் அடித்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்