தமிழில் ரிலீசாகும் புதிய படங்களை சட்ட விரோதமாக தமிழ்ராக்கர்ஸ், தமிழ் கன் என்ற பெயரில் இயங்கி வரும் இணையதளங்கள் வெளியிட்டு வருகின்றன.இந்த இணையதளங்களில் அட்மினாக செயல்படுபவர்களை விரைவில் பிடித்து பைரசிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பதவி ஏற்றவுடன் விஷால் தெரிவித்தார்.
இந்நிலையில், இணையத்தில் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் அட்மின் ஒருவரை சென்னை திருவல்லிக்கேணியில் போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்ததாகச் செய்திகள் வெளியாகின.

கைது செய்யப்பட்டவர் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் என தகவல் வெளியான நிலையில், இது தவறான செய்தி என்ற அந்தத் தளத்தின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் குறிப்பிடப்பட்டது.இதையடுத்து கைது செய்யப்பட்டது ‘தமிழ் ராக்கர்ஸ்’ அட்மின் இல்லை எனவும், ‘தமிழ் கன்’ தளத்தின் அட்மின் எனவும் செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் ‘தமிழ் கன்’ தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்தது. தமிழ் கன் அட்மின் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுப்பு தெரிவித்த தமிழ் கன் இணையதளம் சவால் ஒன்றையும் விடுத்தது. அதில், அப்பாவிகளைக் கைது செய்ய வேண்டாம் எனவும் முடிந்தால் ‘துப்பறிவாளன்’ படத்தை காப்பாற்றிக் கொள்ளுமாறு சவால் விடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், விஷாலின் ‘துப்பறிவாளன்’ திரைப்படம் இன்று வெளியானது. இந்தப் படத்தை பைரசி கும்பலிடம் இருந்து காப்பாற்ற மாவட்டம்தோறும் விஷால் தனது ஆதரவாளர்களைப் பறக்கும் படையினராக நியமித்து தியேட்டர்களைக் கண்காணிக்கச் சொல்லியிருந்தார்.Thupparivaalan-Movie_cinemapettai

படம் வெளியான முதல்நாளான இன்றே விஷாலின் ‘துப்பறிவாளன்’ திரைப்படம் தமிழ் கன் இணையதளத்திலேயே வெளியாகி இருக்கிறது. அதில் வெளியிடப்பட்ட திருட்டு ப்ரின்டை இதுவரை 55,000-க்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கிறார்கள்.அரசும், தயாரிப்பாளர்களும் எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை விதித்து வந்தாலும், பைரசி தளத்தினர் அவற்றையெல்லாம் சுக்குநூறாக உடைத்து படம் வெளியான முதல் நாளிலேயே தங்களது இணையதளங்களில் பதிவேற்றிவிடுகிறார்கள். தனது தீவிரக் கண்காணிப்பையும் மீறி ‘துப்பறிவாளன்’ படம் இணையத்தில் வெளியானதையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் என்ன செய்யப்போகிறார் எனத் தெரியவில்லை.