தற்போதைய தமிழ் சினிமா பல பிரச்சினைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. ஒரு படம் வெளிவருவதற்குள் பல்வேறு அரசியல் இடையூறுகளை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. சமீபத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்திற்கு கூட பல அரசியல் எதிர்ப்புகள் வந்தது.
இதனால் படத்தை தயாரிக்கும் பல தயாரிப்பாளர்களும் திரைத்துறையை விட்டு சென்று விடலாம் என்று விரக்தி அடைகின்றனர். பழம்பெருமை வாய்ந்த ஏவிஎம் நிறுவனம் கூட இப்படி பல காரணங்களால் தான் தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதைப்பற்றி வழக்கறிஞரும், ஓய்வு பெற்ற காவல் அதிகாரியுமான வரதராஜ் மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களையும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கி வெளியிட்டு வருகிறது.
அப்படி அவர்கள் வாங்கும் அந்த திரைப்படங்களை மிகவும் குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபம் பார்த்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது சினிமாவில் முதலீடு செய்வதற்கு பல கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசியல்வாதிகளும் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் தியேட்டர்களை தன் கைவசம் வைத்திருக்கும் சில பெரும் புள்ளிகள் திரைப்படங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி வருவதாகவும், அதனால் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் லாபம் பார்க்க முடியாமல் தவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பல திரைப்படங்களை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன் பலத்தை நடிகர்களிடம் காட்டி மிரட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்குப் பின்னால் இருக்கும் சன் பிக்சர்ஸின் ராஜதந்திரம் பலரையும் அதிர்ச்சி ஆக்கியுள்ளது. எப்படி என்றால் அண்ணாத்த திரைப்படத்தின் தோல்வியை காரணம் காட்டி சன் பிக்சர்ஸ் கட்டாயபடுத்தியதால் தான் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்தத் தோல்வியை காரணம் காட்டி சன் பிக்சர்ஸ் நடிகர்களிடம் ஒரு சில கோடிகளை நஷ்ட ஈடாக வாங்கியதாகவும் தெரிகிறது. இப்போது வெளியாகியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்திற்கும் அதே நிலமை ஏற்படும் என்றும், எக்காரணம் கொண்டும் விஜய் நஷ்ட ஈடு தர கூடாது என்றும் வரதராஜ் கூறியிருக்கிறார்.
இதற்குப் பின்னால் அரசியல் பலம் இருப்பதால் தான் சன் பிக்சர்ஸ் இவ்வளவு துணிந்து செயல்படுகிறது என்று அவர் தமிழ் சினிமாவுக்கு நேரும் அவல நிலையைப் பற்றி பேசியிருக்கிறார். அவருடைய இந்த கருத்துக்கு தற்போது பொதுமக்கள் மத்தியில் ஆதரவு குவிந்து வருகிறது.