காசுக்காக திணிக்கப்படும் வன்முறை, பலான காட்சிகள்.. சீரழியும் தமிழ் சினிமா

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் குடும்பம், காதல், சென்டிமென்ட் போன்ற திரைப்படங்கள் தான் அதிக அளவில் வெளிவந்து கொண்டிருந்தது. அது போன்ற கதையம்சம் கொண்ட படங்கள் அனைத்தும் பல நாட்கள் கடந்தும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போதைய தமிழ் சினிமாவின் தலையெழுத்தே முற்றிலுமாக மாறிவிட்டது. எந்த திரைப்படத்தை பார்த்தாலும் ஆபாசம், வன்முறை, கெட்ட வார்த்தைகள், பாலியல் துன்புறுத்தல் போன்ற காட்சிகள் தான் தலைவிரித்து ஆடுகிறது. குடும்பத்துடன் படங்களை பார்த்து ரசித்த மக்கள் தற்போது குழந்தைகளுடன் ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு அச்சப்படுகின்றனர்.

அந்த அளவுக்கு தமிழ் சினிமா தற்போது ஒரு வியாபார நோக்கில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கு பின்னணியில் பிரபல ஓடிடி நிறுவனங்கள் இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏனென்றால் தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு தான் சென்சார் சான்றிதழ் வாங்க வேண்டும்.

அதனால் அப்படிப்பட்ட திரைப்படங்களில் அதிக பட்ச வன்முறை காட்சிகள் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருக்காது. ஆனால் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களுக்கு இப்படி எந்தவித நிபந்தனையும் கிடையாது. அதனால்தான் பல ஓடிடி நிறுவனங்களும் சம்பந்தப்பட்ட இயக்குனர்களிடம் இதுபோன்று வன்முறை ஆபாச காட்சிகள் நிறைய இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான சாணி காகிதம் திரைப்படத்தில் கூட நாயகி கீர்த்தி சுரேஷ் எக்கச்சக்க கெட்ட வார்த்தைகளை பேசி இருப்பார். அதுமட்டுமல்லாமல் கேங்க் ரேப், தொடர் கொலைகள் என்று பல காட்சிகள் பார்க்கும் அனைவரையும் குலை நடுங்கச் செய்தது. இதுபோன்ற தேவையற்ற வன்முறை காட்சிகள் எதற்காக திணிக்கப்படுகிறது என்ற கேள்விதான் அனைவருக்கும் எழுகிறது.

அப்படி என்றால் தமிழ் சினிமாவில் ஆபாசம் இல்லாத திரைப்படங்கள் வருவதற்கு சாத்தியமே இல்லையா என்று கூட பலருக்கும் தோன்றலாம். அப்படி வன்முறை இல்லாத திரைப்படங்களை எடுப்பதற்கு பல இயக்குனர்கள் தயாராக இருந்தாலும், வியாபார நோக்கிற்காக அவர்களும் இது போன்ற ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பது தான் கசப்பான உண்மை.

அதனால் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் சென்சார் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இன்றைய தலைமுறையினரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது அரசு இதுபோன்ற விஷயங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சீரழிந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமா காப்பாற்றப்படும்.

Next Story

- Advertisement -