மிகப்பிரமாண்டமாக தயாரான பாகுபலி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ.250 கோடியில் உருவான இந்த படம் ரூ. 500 கோடி வசூல் குவித்து சாதனைபடைத்தது. இதன் இரண்டாம் பாகம் ரூ. 300 கோடி செலவில் படமானதாக கூறப்படுகிறது.

‘பாகுபலி -2’ படப்பிடிப்பும் நிறைவடைந்ததையடுத்து, 2 பாகங்களுக்கும் சேர்ந்து சுமார் 4 ஆண்டுகள் பணிபுரிந்த படக்குழுவினர் கண்ணீருடன் பிரியாவிடை பெற்றனர்.

இதில் நடித்தவர்கள் அனைவரும் குழுவாக இருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதில் நடித்தது குறித்து கூறிய தமன்னா….

“ மென்மையான பயந்த பெண்ணாக இருந்த என்னை வலிமையான பெண்ணாக மாற்றியது ‘பாகுபலி’ தான். பாகுபலியில் நான் ஏற்ற அவந்திகா பாத்திரத்துக்காக குதிரையேற்றம், வாள்வீச்சு எல்லாம் கற்றுக் கொடுத்து என்னை தைரிய சாலியாக மாற்றினார்கள். அதற்கு காரணம் அந்த அவந்திகா பாத்திரம். இப்போது அவந்திகாவை விட்டு பிரிகிறேன்”என்றார்.

‘பாகுபலி’ படதயாரிப்பாளர் ஷோபு அவரது டுவிட்டர் பக்கத்தில், “ மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பாகுபலி 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு வெற்றி கரமாக நிறைவடைந்திருக்கிறது. 2012-ல் தொடங்கிய எங்கள் பயணம் அற்புதமாக நிறைவு பெற்று இருக்கிறது. இது இந்த குழுவால் தான் சாத்தியமானது. எந்த நிபந்தனையும் இல்லாமல் படத்தின் நாயகன் பிரபாஸ் நேரம் ஒதுக்கி நடித்துக்கொடுத்தது எங்களால் மறக்க முடியாத ஒன்று. தற்போது கமலக்கண்ணன் தலைமையில் கிராபிக்ஸ் பணி நடந்து வருகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.