bell-bottom

இந்திரா காந்தியை கண்முன் நிறுத்திய உலக அழகி.. அதிரடியாக வெளிவந்த பெல்பாட்டம் ட்ரெய்லர்!

சினிமாவைப் பொருத்தவரை நாம் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறோமோ அந்த கதாபாத்திரமாகவே மாறி விட வேண்டும். நடை, உடை, சிகை அலங்காரம் உட்பட அனைத்திலுமே அந்த கதாபாத்திரம் தெரிய வேண்டும். அவ்வாறு தன்னை முழுமையாக அர்ப்பணித்து நடிப்பதில் கமல்ஹாசன் ஒரு வரம் என்றே கூறலாம்.

இந்த பட்டியலில் என்றும் நடிகர் கமலுக்கு ஒரு சிறப்பான இடம் இருக்கும். அவருக்கு போட்டியாக எத்தனையோ பேர் நடிக்க வந்தாலும் கமல்ஹாசன் சிம்ம சொப்பனம். அவர் நடிப்பில் வெளியான தசாவதாரம் படத்தில் கமலின் நடிப்பு பலரது பாராட்டைப் பெற்றது.

தற்போது இந்த வரிசையில் முன்னாள் உலக அழகி லாரா தத்தாவும் இணைந்துள்ளார். அக்ஷய் குமார் மற்றும் லாரா தத்தா நடிப்பில் உருவாகியுள்ள பெல் பாட்டம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட லாரா தத்தா இந்த ட்ரெய்லரில் நான் இருக்கிறேன், யாராலும் கண்டு பிடிக்க முடிகிறதா என்ற கேள்வி எழுப்பினார். ஆனால் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்த 1984ஆம் ஆண்டு, மறைந்த பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின் போது நடந்த ஒரு விமான கடத்தல் முயற்சியை பின்னணியாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லரில் அக்‌ஷய் குமார், வாணி கபூர், ஹூமா குரேஷி ஆகியோர் உள்ளனர். லாரா எங்கே உள்ளார் என பலரும் குழப்பத்தில் இருக்க, இந்திரா காந்தியாக நடித்திருப்பது நான் தான் என்று அவர் கூறி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

ட்ரெய்லரை பார்த்தால் இந்திரா காந்தியே நடித்திருப்பது போல் தான் இருக்கிறது. அந்த அளவிற்கு அச்சுப்பிசகாமல் அப்படியே இந்திராகாந்தியாகவே மாறியுள்ளார் லாரா தத்தா. அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். உங்களுக்கு சந்தேகம் என்றால், நீங்களும் ட்ரெய்லரை பாருங்க.