LIGER-TRAILER-Tamil-Vijay-Deverakonda

லயனுக்கும், டைகருக்கும் பிறந்த கிராஸ் ப்ரீட் இந்த லைகர்.. வெறிபிடித்த மிருகமாக மாறிய விஜய் தேவரகொண்டா

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா தற்போது லைகர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். குத்துச்சண்டை வீரராக அவர் நடித்திருக்கும் இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

பூரி ஜெகன்நாத் இயக்கி இருக்கும் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ராஜ மாதா ரம்யா கிருஷ்ணனின் குரலில் ட்ரைலரின் ஆரம்பமே பட்டையை கிளப்புகிறது. ஒரு லயனுக்கும், டைகருக்கும் பிறந்த கிராஸ் ப்ரீட் தான் என்னுடைய பையன் என்று அவருடைய கணீர் குரலில் ஆரம்பித்து டைலரின் ஒவ்வொரு காட்சியும் ஆக்ஷனில் தெரிகிறது.

திக்கு வாய் குத்துச்சண்டை வீரராக நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா அதற்காக நிறைய உழைத்திருப்பார் என்று டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. அவருக்கு அம்மாவாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் ஒவ்வொரு காட்சியிலும் அதிர வைக்கிறார்.

மகனின் கனவுக்கு துணை நிற்பதிலும், ஒரு காட்சியில் மகனையே எட்டி உதைப்பதிலும், வில்லனை எதிர்த்து நிற்பது போன்ற காட்சிகளில் ரம்யா கிருஷ்ணன் கச்சிதமாக பொருந்தி போகிறார். அவரைத் தவிர இந்த கேரக்டரை யாரும் செய்ய முடியாது என்னும் அளவுக்கு ட்ரெய்லரின் ஒவ்வொரு இடத்தையும் அவர் ஆக்கிரமித்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் நிஜ குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இதுவே இந்த படத்திற்கான ஒரு ப்ளஸாக இருக்கிறது. அந்த வகையில் இந்த ட்ரெய்லர் ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.