சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் ‛புலி’. இப்படத்தின் இசை வெளியீட்டில் டி.ராஜேந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது புலி பற்றி அவர் பேசிய டைமிங் பேச்சு அங்கிருந்தவர்களை கலகலக்க வைத்தது. நடிகர் விஜய்யே எழுந்து வந்து டி.ராஜேந்தரிடம் போதும் என்கிற அளவுக்கு கலகலப்பாக அடுக்கு மொழிகளில் பேசினார். டி.ராஜேந்தரின் பேச்சை விட அவரின் பேச்சை வைத்து போடப்பட்ட மீம்ஸ்கள் தான் அன்று டிரெண்ட்டிங்கில் இருந்தது. இந்நிலையில் தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பதிலடி கொடுத்துள்ளார் டி.ராஜேந்தர்.

சமீபத்தில் டி.ராஜேந்தர் அளித்த பேட்டி ஒன்றில், புலி மீம்ஸ்கள் குறித்து பேசினார். அவர் பேசுகையில், ‛‛கழிவறையில் எல்லோராலும் பேசவும் முடியும், பாடவும் முடியும். ஆனால் மேடையில் தோன்றி பேச முடியாது. நான் அன்று புலி பட விழாவில் பேசியதை விஜய் ரசிர்கள் உட்பட பல பேர் ரசித்தனர். அன்றைக்கு டிரெண்ட்டிங்கில் இந்திய அளவில் 3வது இடத்தில் நான் இருந்தேன். எத்தனை பேர் இந்த பெருமையை பெற முடியும். யார் என்ன வேண்டுமானாலும் மீம்ஸ்கள், மாம்ஸ்களை போடுங்கள்… என்னை மாதிரி யாராலும் பேச முடியாது. வைரம் வைரம் தான்” என்று கூறியுள்ளார்.