தமிழகத்தையை உலுக்கிய இந்த கொலை சம்பவம் குறித்து, ரயில்வே போலீசார் விசாரித்து வந்தனர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள கட்டடங்களின் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, கொலையாளியை அடையாளம் கண்டனர்.
கொலையாளி, சுவாதியை கொன்ற பின், மின்னல் வேகத்தில் தண்டவாளத்தை கடந்து, சூளைமேடு வழியாக தப்பிச் செல்லும் வீடியோ ஆதாரமும் ரயில்வே போலீசாருக்கு கிடைத்தது.

கொலை நடந்த போது ரயில் நிலையத்தில் இருந்தவர்களிடம் வீடியோ ஆதாரத்தை காட்டிய போலீசார், ‘அவன் தான் கொலைக்காரன்’ என, உறுதி செய்துள்ளனர். எனினும் ரயில்வே போலீசாரால், அவன் பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் நேற்று, சுவாதி கொலை வழக்கு, சென்னை மாநகர போலீசாருக்கு மாற்றப்பட்டது.

திருவல்லிக்கேணி துணை போலீஸ் கமிஷனர் பெருமாள் தலைமையில், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் என, 25 பேர் இடம் பெற்ற, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளியை சுற்றி வளைக்கும் பணி துவங்கியது.
தனிப்படை போலீசார், கொலையாளி விட்டுச் சென்ற, அரிவாளில் பதிவாகி இருந்த கைரேகை மற்றும் அவன் சட்டை பட்டன், தலைமுடி ஆகியவற்றை, நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்து கொலையாளியின் முகவரியை கண்டுபிடித்துள்ளனர்; ஆனாலும், ரகசியம் காத்து வருகின்றனர்.

இதுகுறித்து, போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது:
சுவாதி கொலை வழக்கில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சூளைமேடு, சவுராஷ்டிரா தெரு வழியாக, தந்தையுடன் சுவாதி, இருசக்கர வாகனத்தில் செல்வதை நோட்டமிட்டு, மர்ம நபர் பின் தொடர்ந்து செல்லும் வீடியோ காட்சியும் கிடைத்துள்ளது. கொலையை நேரில் பார்த்த ஒருவர், கொலையாளி பற்றி துப்பு கொடுத்துள்ளார். கொலையாளி சுற்றி வளைக்கப்பட்டுள்ளான்; விரைவில் அவன் கைது செய்யப்படுவான்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.