நீட் எழுத தமிழகத்தில் இருந்து வந்த மாணவர்களுக்கு உதவிய கேரளா முதல்வருக்கு நடிகர் சூர்யா சல்யூட் அடித்திருக்கிறார்.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவத்திற்கான நுழைவு தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில், தமிழகத்தை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் கலந்து கொண்டனர். தேர்வு மையங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, ராஜஸ்தான், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றது. இது பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இருந்தும், சிபிஎஸ்ஐ நிர்வாகம் முடிவே இறுதியாக அமைந்தது.

தமிழக மாணவர்கள் பலரும் பல மாநிலங்களில் தேர்வு எழுதினார். கேரளா முதல்வர் பினராயி விஜயன் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு கேரளாவில் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பஸ் நிலையங்களில் உதவி மையங்களை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி, கேரளா சென்ற தமிழக மாணவர்கள் அதிக சுமை இல்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. இது பல தரப்பிலும் பெரும் வரவேற்பை பெற்றது. பலரும் பினராயி விஜயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யாவும் பினராயி விஜயனின் செயலுக்கு பெரும் சல்யூட்டை அடித்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, தமிழகத்தில் இருந்து நீட் எழுத வந்த மாணவர்களுக்கு கேரளா தாயுள்ளத்துடன் உதவி செய்கிறது. இதனால், தமிழகமே மகிழ்ச்சியில் இருக்கிறது. மன உளைச்சல் இல்லாமல் தேர்வு எழுத உரிய நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் பினராயி விஜயன், மற்றும் அதிகாரிகளுக்கும், கேரள மக்களுக்கும் பாதம் தொட்டு நன்றி கூறுகிறேன் எனத் தெரிவித்து இருக்கிறார்.