Tamil Cinema News | சினிமா செய்திகள்
தடுமாறும் சூர்யா.. தடம் பதிக்கும் கார்த்தி.. எங்கு ஆரம்பித்தது சரிவு?
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை வாரிசு நடிகர்கள் நிறைய பேர் வருகிறார்கள். ஆனால் அதில் ஓரிரண்டு பேரால் மட்டுமே சினிமாவில் நிலைத்து சாதிக்க முடிகிறது. அந்த வகையில் சாதித்தவர்கள் தான் நடிகர் சூர்யாவும் அவரது தம்பி கார்த்தியும். ஆரம்ப காலகட்டத்தில் சூர்யாவின் படங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மௌனம் பேசியதே, நந்தா, பிதாமகன், கஜினி போன்ற படங்கள் சூர்யா என்ற மாபெரும் நடிகரை தமிழ் சினிமாவில் தடம் பதிக்க செய்தது. ஒருபக்கம் ஹரியுடன் சேர்ந்து ஆறு, சிங்கம், சிங்கம் 2, வேல் என மாஸ் வெற்றிகளாக கொடுத்து வந்தார். பிறகு லிங்குசாமியுடன் சூர்யா முதன் முறையாக கைகோர்த்த திரைப்படம் அஞ்சான். இங்குதான் சூர்யாவின் சரிவு ஆரம்பமானது. அஞ்சான் படத்தின் டீஸருக்கு இருந்த வரவேற்பு படத்தின் முதல் காட்சி கூட இல்லை என்பதுதான் சோகமான விஷயம்.
அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாஸ் படம் சூர்யாவின் மார்க்கெட்டை அசைத்தது. தொடர்ச்சியாக வந்த சிங்கம்-3, தானா சேர்ந்த கூட்டம், என் ஜி கே, காப்பான் போன்ற படங்கள் சூர்யாவின் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் சூர்யாவின் மார்க்கெட்டையும் மொத்தமாக வீழ்த்தியது.
தயாரிப்பாளராக பல படங்களில் வெற்றி பெற்றாலும் நடிகர் சூர்யாவுக்கு இது ஒரு சோதனை காலம் தான். இருந்தாலும் பீனிக்ஸ் பறவை போல் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். அதன் வெளிப்பாடுதான் சூரரைப்போற்று என்ற பிரமாண்ட படம். கதைத் தேர்வில் சொதப்பிய சூர்யாவுக்கு ஆச்சரியமாக இருப்பது கார்த்தியின் படக்கதை தேர்வுதான்.
சூர்யாவின் தம்பி கார்த்தி தமிழ்சினிமாவில் குறைந்த அளவு படங்கள் நடித்திருந்தாலும் ஓரிரண்டு படங்களை தவிர அனைத்துமே வெற்றி படங்களாக கொடுத்தவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த கைதி படம் 100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது. ஒரு பக்கம் சூர்யா தொடர் தோல்விகளை கொடுத்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் கார்த்தி தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
கார்த்தியின் கதை அறிவுக்கு தீரன் அதிகாரம் ஒன்று, கைதி ஆகிய படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். வெறும் மாஸ் காட்சிகளை மட்டும் நம்பாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் கார்த்தி தொடர் வெற்றி நாயகனாக நடித்து வருகிறார். அதேபோல் சூர்யாவும் தற்போது மாஸ் என்பதில் இருந்து சற்று விலகி தற்போது கதை தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார்.
இருந்தாலும் சூர்யா தனது திறமையை நிரூபிக்க சூரரைப்போற்று திரைப்படத்தை எந்த ஒரு படத்துடனும் போட்டி போடாமல் இறக்கினால் மட்டுமே வசூல் ரீதியாகவும் வெற்றி பெற முடியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
சூரரைப்போற்று பிரம்மாண்ட வெற்றி அடைய வாழ்த்துக்கள்.!
