நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்திற்கான புரோமோஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வெகு காலத்திற்கு பிறகு சூர்யாவின் படம் திரையரங்கிற்கு வர இருக்கிறது.
அதேபோல, ஜெய்பீம் என்ற படம் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு கதையில் நடித்து விட்டு அடுத்து எந்த படத்தில் நடிக்கப்போகிறார் நடிகர் சூர்யா என்ற எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்திலும் இருக்கத்தான் செய்கிறது. அப்படி இருக்கையில் சூர்யா அவர்கள் இயக்குனர் பாலா உடன் கை கோர்க்கப் போகிறார் என்ற செய்தி இணையத்தில் சில நாட்களுக்கு முன்பு கசிந்திருக்கிறது. இதற்கு முன்னால் இவர்கள் இருவரும் பிதாமகன் படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றினார்கள். பிதாமகன் படம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திய ஒரு படம். அப்படி ஒரு கதாபாத்திரத்தை எவராலும் சூர்யாவிற்கு தந்துவிட முடியாது.
யோசிக்க கூட முடியாது, ஆனால் அதனை சூர்யா மிக அருமையாக நடித்து முடித்தார். ஆக, மீண்டும் இவர்கள் இருவரும் இணையப் போகிறார்கள் என்று எத்தனையோ முறை செய்திகள் கசிந்து இருந்தாலும், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. அப்படி இருக்கையில், இப்போது ஒரு முக்கிய தகவலாக சூர்யா தன்னுடைய அடுத்த படத்தை இயக்குனர் பாலா உடன் இணையப் போகிறார் என்றும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க வில்லை என்றால் சூர்யா ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் வெகு நாட்கள் கழித்து சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூர்யா ஜோதிகா ஜோடி தமிழ் சினிமாவில் மிகவும் வெற்றிகரமாக தங்களுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு ரியல் ஜோடி. ஆனால் இந்த ரியல் ஜோடி வெகுநாட்களாக சினிமாவில் ஒன்றாக நடிக்கவில்லை என்ற ஏக்கம் அனைவருக்கும் இருந்திருக்கும். கண்டிப்பாக இந்த படம் அமைந்தால் அந்த ஏக்கம் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கான வேலைகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சூர்யாவின் திரை வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய பிதாமகன் படம் போல் இந்தப்படமும் நிச்சயமாக அவரின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இயக்குனர் பாலா விருதுகளுக்காக வசூலுக்காக படம் எடுப்பவர் இல்லை. அவரின் திரைப்பட பாணியே திரைக்கதையை அணுகும் விதமே வித்தியாசமாக இருக்கும்..
அவர் எடுக்கும் படங்களில் பெரிய ஹீரோக்கள் நடிக்க நிச்சயமாக தயங்குவார்கள். அப்படி இருக்கையில் பிதாமகன் படத்தில் விக்ரமும் சூர்யாவும் அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க காரணமாக இருந்தது அந்த படத்தை இயக்குவது இயக்குனர் பாலா என்பதால்தான். நான் கடவுள் ஆர்யா, பரதேசி அதர்வா என இன்றுவரை நம் மனதில் பல கதாபாத்திரங்கள் அப்படியே பதிந்து விட்டது என்றால் அது பாலாவின் கைவண்ணம்தான். அந்த வரிசையில் இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது. படம் எப்படி இருக்கப்போகிறது, மேலும் இந்த படத்தில் யாரெல்லாம் பணியாற்ற போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.