Tamil Cinema News | சினிமா செய்திகள்
இமயமலையை தனி விமானத்தில் சுற்றி பார்க்க போகும் சூப்பர்ஸ்டார்…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்புகளின் ஓய்வு நேரத்தில் இமயமலையை சுற்றி பார்க்க அவருக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பெரும்பாலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்தின் படப்பிடிப்பை எல்லாம் முடித்து கொண்டு, அதன் வரவேற்பை பார்த்த பிறகே அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடுவார். இது தான் பல வருடமாக அவரின் வழியாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது ரஜினி தன் படப்பிடிப்பை முடித்து ரிலீஸுக்கு தயாராக இரண்டு படங்களை வைத்து இருக்கிறார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 2.ஓ. ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டு இருக்கும் இப்படம் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது. நாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். படத்தின் வில்லன் வேடத்தை பாலிவுட் கிங் அக்ஷய் குமார் ஏற்று இருக்கிறார். அதிக வேடத்தில் அவர் இப்படத்தில் தோன்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்தும் கிராபிக்ஸ் பணிகள் இதுவரை முடிக்கப்படாததால் படத்தில் ரிலீஸை படக்குழு தள்ளி வைத்து இருக்கிறது.
இதே நேரத்தில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படம் அடுத்த மாதத்தில் திரைக்கு வர இருக்கிறது. வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் படத்தை தனுஷ் தயாரித்து இருக்கிறார். படத்தின் பாடல்கள், பர்ஸ்ட் லுக் என பெரும் வரவேற்பு நிலவி வருகிறது.
கடந்த வருடத்தின் கடைசியில், ரஜினிகாந்த் தன் அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். அதனால், அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க மாட்டார் என நினைத்த நேரத்தில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தின் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒரு பக்கம் நாயகி வேட்டை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக திருநாவுக்கரசு ஒப்பந்தமாகியிருந்தார். அவருடன் இமயமலை பகுதியில் படப்பிடிப்பு நடத்த சில இடங்களை பார்த்து பிக்ஸ் செய்து வந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
ஜூன் 2வது வாரத்தில் தொடங்க இருக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். இதனால் சில காலம் இமயமலையில் தங்கி இருக்க வேண்டும் என்பதால் ஓய்வு நேரத்தை செலவழிக்க ஒரு சூப்பர் வழியை கண்டுபிடித்து இருக்கிறார். தனக்கு ரொம்ப பிடித்த இமயமலையை தனி விமானத்தில் சுற்றி பார்க்க இருக்கிறாராம் சூப்பர்ஸ்டார். இதற்காக அவருக்கு ஒரு விமானம் இப்போதே ஹெலிகாப்டர் புக் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
